நடிகர் தனுஷ் டைரக்ட் செய்து அவரே நாயகனாகவும் நடித்த படம் இட்லி கடை. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் வுண்டர்ஃபார் பிலிம்ஸ் ரெட் ஜெயின்ட் மூவிஸ் இணை தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 55 கோடி ரூபாய்க்கு மேல் இதுவரை வசூல் செய்த இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப் படம்தான் என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் கடந்தாண்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கிய நடித்த ராயன் படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அந்த படத்துடன் ஒப்பிடுகையில் இட்லி கடையில் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது. அதே போல் அடுத்தடுத்து வெளியான தனுஷ் நடித்த குபேரா தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களும் தனுஷூக்கு வெற்றியை தரவில்லை.
இட்லி கடை படத்தை கடந்த ஏப்ரல் 10ம் தேதியே ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. அதே நாளில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் தேதி குறிப்பிடாமல் இட்லி கடை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த இப்போது கடந்த 1ம் தேதி வெளியானது. ஆனால் அடுத்த நாளே 2ம் தேதி ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா சாப்டர் 1 படம் போட்டிக்கு வந்துவிட்டது.
காந்தாரா சாப்டர் 1 படம் இதுவரை 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் இன்னும் அந்த படத்துக்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் குறையவே இல்லை. ஆனால் இட்லி கடை படம் வந்த சில தினங்களிலேயே ரசிகர்களின் கூட்டமின்றி வசூல் மந்தமாகி விட்டது. பெரும்பாலான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இட்லி கடை காட்சியை குறைத்து காந்தாரா சாப்டர் 1 படத்தின் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டனர்.
இட்லி கடை படம் சென்டிமென்ட் எமோஷனல் கதைக்களத்தில் இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு இந்த ஓவர் சென்டிமென்ட் கொஞ்சம் கசப்பை ஏற்படுத்தி விட்டது. அப்பா மகன் பாசம் கதை எல்லாம் சேரன் எடுத்த தவமாய் தவமிருந்து படத்திலேயே ரசிகர்கள் பார்த்த நிலையில் இப்போது இட்லி கடை படம் பெரிய தாக்கத்தை ரசிகர்களுக்குள் ஏற்படுத்தவில்லை. எனினும் எப்படியே 55 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலித்து விட்டது.
இந்நிலையில் இட்லி கடை படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இட்லி கடை படம் வெளியாக உள்ளது. இட்லி கடை படம் வெளியாகி சரியாக 29வது நாளில் இந்த படம் ஓடிடியில் வருகிறது. தியேட்டரில் தான் 6 மாதங்கள் தாமதமாக வந்தது. ஆனால் ஓடிடியில் சுடச்சுட ஆவி பறக்க இட்லி கடையை திறக்கப் போகிறார்கள் போல என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





