இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவே உற்றுநோக்கும் நடிகைகளில் மிக முக்கியமானவர் பிரியங்கா சோப்ரா. இந்தி திரை உலகில் அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வருகிறார். பிரியங்கா சோப்ராவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே அங்கு இருக்கிறது. 2003 ஆம் ஆண்டு தான் அவர் ஹிந்தி திரை உலகிற்கு அறிமுகமானார்.
அங்கிருந்து அவரது பயணம் ஜெட் வேகத்தில் செல்ல அதே உயரத்திலும் பறந்தார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து மூத்த நடிகையாக களம் கண்டார். 2018 ஆம் ஆண்டு வெளி நாட்டைச் சேர்ந்த நிக் ஜோனஸ் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். இப்படி பலரும் வியக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் முதல் திரைப்படம் ஒரு தமிழ் திரைப்படம் என்றால் நம்ப முடிகிறதா.
2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் தான் பிரியங்கா சோப்ராவுக்கு முதல் திரைப்படம். பிரியங்கா சோப்ரா அதற்கு முன்னதாக 2000 ஆண்டு, மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றிருந்தார். இதன் மூலமே அவருக்கு தமிழன் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த படப்பிடிப்பில் நடந்த பல்வேறு சம்பவங்களை தற்போது அவரது தாயார் மது சோப்ரா பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார். இது குறித்து பேசி இருக்கும் அவர், அவள் உலக அழகி பட்டம் பெற்ற பிறகு தமிழன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் அதனை ஆரம்பத்திலேயே பிரியங்கா சோப்ரா மறுத்துவிட்டார். இருப்பினும் படக்குழுவினர் விடவில்லை.
பிரியங்கா சோப்ராவின் சகோதரர் மூலமாக அவரது தந்தையை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க கூறினர். அவரும் கோடை விடுமுறையின் போது படத்தில் நடிக்க வேண்டும் என்று பிரியங்காவை சம்மதிக்க வைத்தார். அவர் தந்தை கூறிய ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே பிரியங்கா சோப்ரா திரை உலகிற்கு வந்தார்.
அதேசமயம் பிரியங்கா சோப்ராவுக்கு உரிய மரியாதையை அவருடன் இணைந்து நடித்த விஜய் கொடுத்தார். பாடல்களுக்கு ராஜூ சுந்தரம் தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். அந்த சமயம் அது பிரியங்காவுக்கு மிகவும் சவாலாக இருந்தது. அதேசமயம் மறுமுனையில் அனுபவம் வாய்ந்த விஜயும் பிரியங்கா கற்றுக் கொள்வதற்காக பொறுமையாக இருந்தது தான் என்னால் நம்ப முடியவில்லை.
பிரியங்கா சோப்ராவும் படப்பிடிப்பில் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் சூட்டிங் முடிவில் பிரியங்காவும் விஜயும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டார்கள். சில சமயம் பிரியங்கா சோப்ரா படக்குழுவினரால் திட்டப்பட்டு இருக்கிறார். இப்படி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தான் அவர் அந்த திரைப்படத்தில் நடித்தார் என்று நடிகையின் தாயார் மது சோப்ரா தெரிவித்திருக்கிறார்.





