நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பை துவங்கிய நிலையில், இன்னும் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இடையில் ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், இடையூறுகளாலும் 4 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பே நடக்காமல் நின்று போனது. இப்போது மீண்டும் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் நடந்து வருகிறது.
மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில், அஜீத்குமார், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, ஹைவேஸ் ரோட்டில் கையில் பேக்குடன் அஜீத்குமாரின் மாஸ் ஆன புகைப்படம், பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் அஜீத்குமாரின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அந்த அறுவை சிகிச்சையின் போது ஷாலினியின் அருகில் ஆதரவாக இருக்காத கணவர் அஜீத்குமார், அஜர்பைஜானில் ஷூட்டிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியை காட்டிலும், ஷூட்டிங்குக்கு முக்கியத்துவம் கொடுத்த அஜீத்குமாரை பலரும் பாராட்டினர்.
ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த நிலையில், முக்கிய காட்சிகளில் நடித்து முடித்த அஜீத்குமார் உடனடியாக சென்னை திரும்பினார். மருத்துவமனையில் ஓய்வில் இருக்கும் மனைவி ஷாலினியை சந்தித்து, இப்போது ஆறுதலாக அவருடன் இருந்து கவனித்து வருகிறார். வருகிற 8ம் தேதி மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள அஜீத்குமார், அஜர்பைஜான் செல்கிறார்.
அஜீத்குமார் அஜர்பைஜான் செல்லும் வரை, அங்கு மற்ற நடிகர்கள் நடிக்க வேண்டிய முக்கிய காட்சிகளை, மகிழ்திருமேனி படம் பிடிக்கிறார். 8ம் தேதிக்கு பிறகு அஜீத்குமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. எனினும் இதில் முக்கிய திருப்பமாக, விடாமுயற்சி படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்ற ஏகே ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் தகவலும் வெளியாகி உள்ளது.
வருகிற தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகாது என்றும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த ரஜினியின் வேட்டையன் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அஜீத்குமார் படம் தீபாவளிக்கு வராது என்பதால், வேட்டையன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





