நடிகர் தனுஷிற்கு அண்மையில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ராக்கி, சாணி காகிதம் படங்களை எடுத்த அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். தனுஷின் தேர்ந்த நடிப்பால் கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து, தனது 50-வது திரைப்படமான ராயன் படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு, மற்றொரு திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி இருக்கிறார். இளவயது காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட மூன்றே மாதங்களில் இதற்கான சூட்டிங்கை முடித்திருக்கிறார் தனுஷ். தற்போது, படத்திற்கான போஸ்ட் ப்ரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனேகமாக நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் அந்த திரைப்படத்திற்காக, பிரியங்கா மோகனை தனுஷ் அணுகி இருக்கிறாராம். அந்தப் படத்தில் ப்ரமோஷன் பாடல் ஒன்றை தனுஷ் எடுக்க முடிவு செய்துள்ளாராம். இதில் தான் பிரியங்கா மோகன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது பிசியாக இருக்கும் நடிகை ஒரு பாடலுக்கு நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது, கவனம் பெற்றுள்ளது.





