நடிகர் அஜீத்குமார் விடாமுயற்சி படத்தை முதலில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனை வைத்து இயக்க தான் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை வேண்டாம் என நிராகரித்து விட்டு, மகிழ் திருமேனியை டைரக்ட் செய்ய அனுமதித்தார். இதுவே பெரும் சர்ச்சையாக மாறியது.
இதைத்தொடர்ந்து அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியன் இறந்த நிலையில், மேலும் சில மாதங்கள் படப்பிடிப்பு தள்ளிப் போனது. மகிழ்திருமேனி விடாமுயற்சி படத்துக்கான கதையை முதலில் சொன்ன போது, கதையை கேட்ட அஜீத் அதில் பல மாற்றங்களை சொல்ல, கதை வேறு விதமாக மாற்றப்பட்டது. அதிலும் சில மாதங்கள் படப்பிடிப்பு தள்ளிப் போனது.
இப்படி பல தடைகள், தாமதங்களால் பல மாதங்கள் தாமதத்துக்கு பின்புதான் எப்படியோ கடைசி வரை போராடி, கடந்த அக்டோபரில் விடாமுயற்சி படப்பிடிப்புக்குழு அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றது. அங்கும் மணல்புயல், கடும் பனிப்பொழிவு, கனமழை என பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டு, தடைபட்டு, பாதி படப்பிடிப்பு கூட இன்னும் முடியவில்லை.
இந்த சூழலில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களிலேயே அஜீத்குமாரின் நெருங்கிய நண்பரும், அந்த படத்தின் கலை இயக்குநருமான மிலன் திடீரென இறந்து போனார். அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், அஜீத்குமாருக்கு போன் செய்து, இன்னும் 45 நிமிடங்களில் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் வரவில்லை. பிறகு அஜீத்குமார் போன் செய்தும், மிலன் போனை எடுக்கவில்லை. போனில் அழைத்தால் பேசாமல் இருக்க மாட்டாரே என்று அஜீத்குமார் யோசித்திருந்த நிலையில், அடுத்த 10 நிமிடங்களில் மிலனின் உதவியாளர் அஜீத்குமாரை போனில் அழைத்து, மிலன் இறந்து விட்ட தகவலை கூறியிருக்கிறார். சிறிது நேரத்துக்கு முன்னால் பேசிய மிலன், அதற்குள் இறந்து விட்டாரா, என அஜீத்குமார் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்.
பிறகு அஜர்பைஜானில் இருந்து சட்ட விதிமுறைகளின் படி, பலகட்ட அதிகாரிகளுடன் பேசி, நேரில் சந்தித்து மிலன் உடல் சென்னைக்கு வர ஏற்பாடு செய்தவர் அஜீத்குமார்தான். எல்லா விஷயங்களையும் முன்னால் நின்று கவனித்திருக்கிறார். சமீபத்தில் அவரது மற்றொரு நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமி மரணமும் அஜீத்தை கடுமையாக பாதித்திருக்கிறது என்று பல உண்மை தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளது.





