இசைஞானி இளையராஜா, பஞ்சு அருணாசலம் தயாரித்த அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்போது அன்னக்கிளி உன்னை தேடுதே பாடல் பட்டி தொட்டி எங்கும் வானொலியில் ஒலித்துக்கொண்டே இருந்தது. மக்கள் அடிக்கடி முணுமுணுக்கும் ஒரு பாடலாகவும் டிரண்டிங் ஆக மாறியது.
அன்று முதல் இன்று வரை இசை சக்கரவர்த்தியாக உச்சத்தில் இருக்கும் இளையராஜா, 35 நாட்களில் சிம்பொனி இசைக்கான நோட்ஸ் எழுதி விட்டதாக வீடியோவில் கூறி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். அதே வேளையில் நான் இசையமைத்த பாடல் எனக்கு மட்டுமே சொந்தம், வியாபார ரீதியாக யாரும் அதை பயன்படுத்த கூடாது, அப்படி என் அனுமதியின்றி எனது பாடலை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கூலி படத்தின் டீசரில், தனது பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியிருப்பதற்கு விளக்கம் கேட்டு, படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் இளையராஜா. கூலி படத்தின் நாயகன் நடிகர் ரஜினிகாந்த், தனது நெருங்கிய நண்பராக இருந்தும், அதை இளையராஜா கண்டுகொள்ளவில்லை.
இப்போது, மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில், குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா என்ற நிலையில், நான் இசையமைத்த பாடலை, எப்படி என் அனுமதியின்றி பயன்படுத்தலாம் என்று கேள்வி கேட்டு மஞ்சும்மெல் பாய்ஸ் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் படம் ரூ. 240 கோடி வசூலித்துள்ளதால், பாடலுக்கான நஷ்ட ஈடும் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மஞ்சும்மெல்ஸ் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர், நாங்கள் குணா படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனிடம் அனுமதி பெற்றுதான் கண்மணி அன்போடு பாடலை, எங்களது படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம். அதற்கான தொகையையும் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அவருக்கு நாங்கள் செலுத்தி விட்டோம் என்று பதில் தந்து இளையராஜாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளனர்.
நான் இசையமைத்த பாடல் எனக்கே சொந்தம் என்ற வகையில், அதற்கான தொகையை பெற வேண்டிய நான்தான் என்று இளையராஜா கூறி வருகிறார். இப்போது கண்மணி அன்போடு பாடல் உரிமை, கமல்ஹாசனுக்கு சொந்தமாகி விட்டதாக கூறப்படுவதால், இனி குணா படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசனுக்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் நெருங்கிய நண்பரான கமலுக்கும் இளையராஜா நோட்டீஸ் அனுப்ப தயங்க மாட்டார். ஏனெனில் உயிர் நண்பரான பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியனுக்கே நோட்டீஸ் அனுப்பியவர் இளையராஜா என சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.





