ஜெய்பீம், சூரரைப்போற்று என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. 42ஆவது படமாக உருவாகும் படத்துக்கு கங்குவா என பெயரிடப்பட்டிருக்கிறது.
ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் கங்குவா மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக கொரியன், ஜப்பான், சீன மொழிகளிலும் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இதனால் நிச்சயம் படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை படக்குழுவிடமும், ரசிகர்களிடமும் இருக்கிறது.
அதேசமயம் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியை சந்தித்தது. படுதோல்வி என்பதை தாண்டி கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டது. எனவே கங்குவாவில் சிவா சொதப்பிவிடுவாரோ என்ற சந்தேகமும் சூர்யா ரசிகர்களிடம் ஒருபக்கம் இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தை அடித்து நொறுக்கும்படியாக அமைந்தது சமீபத்தில் வெளியான கங்குவா க்ளிம்ப்ஸும், சூர்யாவின் லுக்கும்.
படம் வெளியாவதற்கு முன்னரே கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கும் மேல் டேபிள் ப்ராஃபிட் பார்த்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஹிந்தியில் மட்டும் 400 கோடி ரூபாய்வரை விநியோகம் ஆகும் எனவும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆரூடம் கூறியிருந்தார். மேலும், கங்குவா படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்ற டார்கெட்டில் படக்குழு உழைத்துவருவதாகவும் ஒரு தகவல் வெளியானது.
இதற்கிடையே கங்குவா படம் சரித்திர கால கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் க்ளிம்ப்ஸ் காட்சிகளை பார்த்தபோது எழுந்தது. இந்நிலையில் கங்குவா எப்படி இருக்கும் என்பது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “கங்குவா படத்தில் முழுமையாக வராற்று காட்சிகள் இருக்காது. அது படத்தின் ஒரு பகுதி மட்டும்தான். தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் நடைபெறும் ஜனரஞ்சகமான படமாக கங்குவா இருக்கும்” என கூறியிருக்கிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் தனஞ்ஜெயன் சொல்வதை பார்த்தால் ஒருவேளை படம் டைம் ட்ராவல் படமாக இருக்குமா என கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, நட்டி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.





