நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் தருமன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, ஆரம்ப காலத்தில் நானும் ரஜினியும் இணைந்து நடித்து வந்த போது எங்களை வைத்து படம் எடுக்க பலர் படை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது ஒரு முறை மும்பைக்கு நாங்கள் ஒன்றாக விமானத்தில் பயணித்தபோது இரண்டு பேரும் தனித்தனியே படங்களில் நடிப்பது என்று முடிவு எடுத்தோம்.
அத்துடன் எங்களில் ஒருவர் மற்றொருவரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்றும் அப்போது நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அது நடப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அதற்கான சரியான கதையை நாங்கள் தேடி வந்தோம். ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேரும் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்து பேசினோம். அப்படி அமர்ந்த இரண்டு இளைஞர்கள் இவ்வளவு தூரம் பயணித்திருப்பது பெருமையாக உள்ளது.
கண்டிப்பாக நாங்கள் ரெண்டு பேரும் வெற்றி பெறுவோம் என்று அப்போதே நம்பினோம். ஆனால் இந்த அளவுக்கு பெரிய வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. ரசிகர்களால்தான் நாங்கள் இந்த வெற்றியை அடைந்துள்ளோம். மேலும் ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் தயாரிப்பாளர் தான் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பார். ஹீரோ நிம்மதியாக இருப்பார்.
ஆனால் தருமன் படத்தை பொருத்தவரை ரஜினிகாந்த் தான் ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கிறார். எங்களை யாரையும் அவர் தூங்கவிடவில்லை. அந்த வகையில் ரஜினிகாந்தும் நண்பர் மகேந்திரனும் இந்த படத்தில் பெரும்பாலான வேலைகளை செய்துள்ளார்கள். நான் பெயரளவுக்கு மட்டுமே தயாரிப்பாளராக உள்ளேன். மற்றபடி வேடிக்கை பார்த்துவிட்டு லஞ்ச் சாப்பிட்டுவிட்டு போய்விடுவேன்.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் படக்குழுவின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்களது முயற்சிகளையும் விருப்பங்களையும் அவரிடத்தில் கூறி இருக்கிறோம். அவர் இந்த படத்தை சிறப்பாக கொடுப்பார் என்று நம்புகிறோம். அவருக்காக அவருக்கு பின்னால் ஒட்டுமொத்த படக்குழுவும் துணை நிற்கிறது என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





