“மாமன்னன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது இயக்குனர் மாரி செல்வராஜ் “தேவர் மகன்” திரைப்படத்தை குறித்து பேசியது பெரும் சர்ச்சைகளை உண்டு செய்தது. மாரி செல்வராஜ் “தேவர் மகன்” குறித்து பேசிய கருத்துகள் பலவும் இணையத்தில் பல விவாதங்களை கிளப்பியது. மேலும் மாரி செல்வராஜின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் செவந்த் சேன்னல் மாணிக்கம் நாராயணன், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் ஆகியோரை குறித்து மிக கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.
“சினிமா என்பது மக்களை மகிழ்விக்க கூடிய ஒரு விஷயம். கமல்ஹாசன் தேவர் மகன் திரைப்படத்தில் அந்த குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தி காட்டுவதற்காக அப்படி படமாக்கினாரே தவிர, அவர் கீழ் ஜாதி என்று யாரையும் காட்டவில்லை. மாரி செல்வராஜிற்கு அவரது சொந்த வாழ்க்கையில் எதாவது பிரச்சனை இருக்கும் என்று நினைக்கிறேன்.

மாரி செல்வராஜும், பா ரஞ்சித்தும் ஜாதியை பிடித்துக்கொண்டு அலைகிறார்கள். இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. இவர்கள் பேசாமல் அரசியலுக்கு போய்விடலாம். அங்கே ஜாதியை சொல்லி ஓட்டு வாங்குங்கள். சினிமாவில் எதற்காக ஜாதியை கொண்டு வருகிறீர்கள். கமல் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்திருக்கிறார். பல வருடங்கள் கழித்து கமல் மேல் அவதூறு பரப்புவதற்காக இப்படி பேசுகிறார்கள்.
பரமக்குடி பக்கம் நடக்கும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து தேவர் மகன் படத்தை அவர் இயக்கியிருந்தார். சிவாஜி என்ற மாபெரும் கலைஞனை மிக சிறப்பாக நடிக்க வைத்திருந்தார். அப்படிப்பட்ட படத்தை இத்தனை வருடங்கள் கழித்து பேசினால் கமல் என்ன செய்வார் பாவம்” என கூறியுள்ளார்.





