இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் கடந்த 1987ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வேலு நாயக்கர் கேரக்டரில் நடித்த கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. இன்றும் இந்த படம் கிளாசிக்கல் படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.
அதன்பிறகு 38 ஆண்டுகளுக்கு பின் கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக்லைஃப் படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்குனராக அறிமுகமாகும் ஒரு புதிய படத்தில் கமல் நடிக்கிறார். இது அவரது 237வது படமாகும்.
அதே போல் தக்லைஃப் படத்துக்கு பிறகு புதுமுகங்களை வைத்து ஒரு சின்ன பட்ஜெட் படத்தை தயாரிக்க இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். இதற்கிடையே சமீபத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவரை இயக்குனர் ஷங்கர் சந்தித்து இந்தியன் 3 படம் குறித்து பேசியிருக்கிறார்.
அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் தயாரிப்பாளர் சுபாஸ்கரனை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது அன்பறிவ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 237 படத்தை தயாரிக்க கமல் பேசியிருக்கிறார். தனக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட்டை ஏற்குமாறு கூறியிருக்கிறார். இப்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என சுபாஸ்கரன் நோ சொல்லிவிட்டார். ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் பலத்த நஷ்டத்தை சந்தித்தவர் சுபாஸ்கரன் என்பது கவனிக்கத்தக்கது.
அதன்பிறகு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பாளர் சுபாஸ்கரனை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது புதுமுகங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்குமாறு கேட்டிருக்கிறார். புதுமுகங்களை வைத்து எடுக்கும் படத்தை தயாரிப்பதில் அதிக ரிஸ்க் உள்ளது. பெரிய நடிகர்களாக இருந்தால் சொல்லுங்க என்று சுபாஸ்கரன் கூறியிருக்கிறார்.
அதன்பிறகு தனது இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் குறித்து அவரிடம் மணிரத்னம் பேசிய நிலையில், அதை பண்ணலாம். எதற்கும் யோசித்து சொல்கிறேன் என்பது போல உறுதியளித்திருக்கிறார் சுபாஸ்கரன். ஏறக்குறைய இதற்கு அவர் ஒத்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மணிரத்னம் சிம்பு ஏஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





