தமிழ் சினிமாவில் வெளியாகும் புதிய படங்கள் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி ரிலீஸ் என்கிற புதிய நடைமுறையை செயல்படுத்தப்படும் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 4 மாநிலங்களை சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருந்தார்.
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடி வெளியீடு என்று கடிதம் கொடுத்தால் தான் திரைப்படங்களை வெளியிட முடியும் என்று நிர்பந்தம் செய்வதை நமது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுகுறித்த பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறோம். வருகிற மே 10ம் தேதி ஹைதராபாத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தை குறித்து தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வினியோகஸ்தர் சங்கங்களுக்கு கடந்த வாரமே கடிதம் அனுப்பி உள்ளோம்.
இந்நிலையில் சிறுபடங்கள் மற்றும் மத்திய பட்ஜெட் படங்கள் 4 வாரங்களுக்கே ஓடிடியில் விற்பனையாகாத இந்த சூழ்நிலையில் ஓடிடி பற்றி 4 மாநில தயாரிப்பாளர்கள் சங்கமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் இப்போது தன்னிச்சையாக முடிவு செய்து இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்களுக்கு 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடி வெளியீடு என்று கடிதம் கொடுக்க வேண்டும்.
அப்படி கொடுத்தால்தான் திரைப்படங்களை வெளியிட முடியும் என்று வினியோகஸ்தர்கள் சங்கமும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் கட்டாயமாக கேட்டுக்கொள்வது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இந்த விஷயம் குறித்து வருகிற 26ம் தேதி ஞாயிறு நடைபெற உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்க பொதுக்குழுவில் பேசி முடிவு செய்யப்படும்.
ஆகையால் திரைப்பட வெளியீடு குறித்து தமிழ் திரைப்பட வினியோகஸ்தர் சங்கமோ திரையரங்கு உரிமையாளர் சங்கமோ கடிதம் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தால் அதை உடனே தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் அத்தகைய கடிதத்தை நமது சங்கத்தின் அனுமதியில்லாமல் எந்த தயாரிப்பாளரும் கொடுக்க வேண்டாம் என்றும் அனைத்து தயாரிப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





