துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். ஆரம்பத்தில் தனது ஒல்லியான தேகத்தால் பலராலும் அவர் கேலி கிண்டலுக்கு ஆளானார். ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காத தனுஷ், தனது நடிப்பின் மீது மட்டும் முழு கவனத்தை செலுத்தி ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
தனுஷின் நடிப்புக்கு முழுக்க முழுக்க தீனி போடும் விதமாக அமைந்த திரைப்படம் தான் காதல் கொண்டேன். தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடிக்க, அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படம் தொடங்கியது முதல் இறுதி வரை அப்பாவி இளைஞர் ஆகவும், சைக்கோ கதாபாத்திரத்திலும் வினோத் ஆகவே வாழ்ந்திருந்தார் தனுஷ்.
அதன்பிறகு ஏராளமான வெற்றி படங்கள் அவர் நடித்திருந்தாலும், செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் படங்களில் மட்டும் தனித்துவமான தனுஷை நம்மால் பார்க்க முடிந்தது. இதற்கு உதாரணமாக மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆடுகளம் ஆகிய திரைப்படங்களை கூறலாம்.
ரவுடி கதாபாத்திரம் என்றால் அது நீளமான முடி உருக்கிய மீசை கம்பீரமான உடல் என்ற தமிழ் சினிமா தொன்று தொட்டு கடைப்பிடித்து வந்த ஃபார்முலாவை உடைத்தெறிந்து கொக்கி குமாராக புதுப்பேட்டையில் மிரட்டினார் தனுஷ். அந்தப் படத்திற்கு நிச்சயம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அது நடைபெறாமல் போக, வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்திற்கு விருது தேடி வந்தது.
தொடர்ந்து மயக்கம் என்ன திரைப்படமும், தனுஷின் நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்தது. அவரின் நடிப்பு தமிழ் சினிமாவைக் கடந்து பாலிவுட், ஹாலிவுட்டிலும் எதிரொலிக்க உலகம் போற்றும் நடிகர்கள் வரிசையில் இணைந்தார் தனுஷ். மேலும் இரண்டாவது முறையாக அசுரன் திரைப்படத்திற்கு அவர் தேசிய விருதை வாங்கினார். தனுஷின் நடிப்பிற்கு மற்றொரு எடுத்துக்காட்டு திரைப்படமாக நானே வருவேன் திரைப்படத்தை கூறலாம். இதில் கதிர் பிரபு என்ற இரண்டு கதாபாத்திரத்தில் அவர் வந்திருந்தார்.
படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், கதிர் கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டது. இந்த நொடியில் அந்த படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், நானே வருவேன் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், நானே வருவேன் படத்தின் கிளைமாக்ஸை செல்வராகவன் என்னிடம் கூற, இது மட்டும் சரியாக அமைந்தால் தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறினேன். நீயும் தலைசிறந்த இயக்குனர்கள் பட்டியலில் ஒரு படி மேலே செல்வாய் என்றேன். ஆனால் படப்பிடிப்பு நடக்கும் போது சில சூழ்நிலை மாறியதால், எதிர்பார்த்ததை படமாக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.





