சமீபகாலமாக இளையராஜா இசையமைக்கும் படங்கள் குறித்த தகவல்களை விட, அவரைப் பற்றிய சர்ச்சையான சம்பவங்களே அடிக்கடி வைரலாகி ரசிகர்களின் கவனத்துக்கு வருகின்றன. குறிப்பாக சில மாதங்களாக அவர், நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் எனக்கே சொந்தம் என உரிமை கேட்டு வருவது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இதற்கிடையே, கவிதை வரிகளும் இசையும் கலந்ததுதான் பாட்டு, இதுகூடத் தெரியாதவன் அஞ்ஞானி என, படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச, அது பெரிய சர்ச்சையாக வெடித்தது. அண்ணன் இளையராஜா குறித்து பேசினால் நடப்பதே வேறு என்கிற பாணியில், கங்கை அமரன் ஆவேசமாக ஒரு வீடியோ பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, ரஜினிகாந்த் நடித்த கூலி டீசர் வெளியான போது, அதில் இருப்பது என்னுடைய பாடலின் பிஜிஎம் இசை என சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். பிறகு மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு என்ற குணா பாடலை பயன்படுத்தியதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், சொந்த தம்பி கங்கை அமரன் மகன் பிரேம்ஜிக்கும், இந்து என்கிற பெண்ணுக்கும் கடந்த 9ம் தேதி, திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் இளையராஜா கலந்துக் கொள்ளவில்லை. அவரது பெயர் இல்லாத திருமண அழைப்பிதழ் வந்த போதே அது பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது.
எனினும் திருமணத்தில் சர்ப்ரைஸ் ஆக இளையராஜா கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் வரவே இல்லை. அதே போல் இந்த திருமணத்தில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா பங்கேற்ற நிலையில், யுவன் சங்கர் ராஜாவும் வரவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் இப்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தனது தம்பி கங்கை அமரன் மகன் பிரேம்ஜி திருமணத்துக்கு இளையராஜா வரவில்லை என்றாலும், திருமணத்துக்கு முன்பே மணமக்கள் இருவரையும் தனது இல்லத்துக்கு வரவழைத்த இளையராஜா, அவர்களை வாழ்த்தி, ஆசிர்வதித்து நிறைய பரிசுப் பொருட்களையும் தந்து அசத்தியிருக்கிறார். ஒரு பெரியப்பாவாக, தம்பி மகனுக்கும், புதியதாக வந்த மருமகளுக்கும் தனது அன்பான வாழ்த்துகளை சொல்லி இருக்கிறார் இளையராஜா.





