தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுக அரசு குறித்தும் திமுக தலைவர் அன்றைய முதல்வர் முக ஸ்டாலின் குறித்தும் தவெக கட்சித் தலைவராக நடிகர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது அரசியல் மாற்றம் வேண்டும் என்று கருதிய தமிழக மக்களுக்கு விஜய் பேச்சு உற்சாகம் தந்தது. உண்மையில் அரசியல் மாற்றம் விஜய் மூலம் வந்துவிடும் என்றுதான் நம்பி விசிலுக்கும் ஓட்டு போட்டனர்.
ஆனால் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய், ஆட்சியமைக்க முடியாமல் கடைசியில் திமுக கூட்டணியில் ஜெயித்த திமுகவினர் ஆதரவில் ஜெயித்த காங்கிரஸ் விசிக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவில் ஆட்சியமைத்தார். அப்போதே அவர் மீதான மக்களின் நம்பிக்கை சரிந்து விட்டது. அவர்களுக்கு அமைச்சர்கள் பதவி தந்தும் தக்க வைத்துக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அதிமுக – திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் என்று பேசிய விஜய், அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எல்லோரையும் தனது கட்சியில் சேர்த்துக்கொண்டார். இதில் அதிமுக வேட்பாளர்களாக ஜெயித்த தாராபுரம் சத்யபாமா மதுராந்தகம் மரகதம் குமரவேல் இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் வந்து விட்டனர்.
இப்போதே அதே தொகுதிகளில் அதே வேட்பாளர்களை தவெக சார்பில் நிறுத்திவிட்டு திமுக தீயசக்தி தவெக தூயசக்தி என்று நேற்று விஜய் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசுகிறார். தவெக ஆட்சிக்கு வந்த இந்த 4 மாதங்களில் முதல்வர் விஜயின் செயல்பாடு நிர்வாகம் சட்டசபையில் அமைச்சர்களின் பேச்சு என அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது நாம் எதிர்பார்த்த ஆட்சி இல்லையே என்று மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
அதிமுக என்று சொல்வது கூட கேவலமாக கருதும் விஜய், மற்றும் பலர் என்கிறார். ஆனால் அதே மற்றும் பலர் கட்சியில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தவெக மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவியை நேற்று மாலை அறிவித்திருக்கிறார். இப்படி அதிமுகவினரை தன் கட்சிக்கு வரவழைத்து அவர்களுக்கு முக்கிய பதவிகள் தந்து கட்சியை பலமாக்கி வரும் விஜய், அதிமுக கட்சியை மற்றும் பலர் என்று எள்ளி நகையாடுவது விசித்திரமாக உள்ளது.
இப்போதைய ஆட்சியில் திமுக எதிர்கட்சி ஆன நிலையில் ஆளுங்கட்சியாக உள்ள தவெக அரசு முதல்வர் விஜய், மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மக்கள் பிரச்னைகளை கவனிக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும். ஆனால் அதை பற்றி எல்லாம் எதுவும் பேசாமல் திமுக திமுக திமுக திமுக என்று மேடை ஏறியவுடன் விஜய் கதற ஆரம்பிப்பது, தமிழக மக்களை எரிச்சலடைய செய்துள்ளது. பழைய ரெக்கார்டை திரும்ப திரும்ப போட்டு ஓட்டறாரே? திமுக பத்தி பேசாமல் இவரால் அரசியல் செய்யவே முடியாது போல என்று கலாய்த்து வருகின்றனர்.





