இயக்குநர் விக்ரமன், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு சிறந்த இயக்குநராக வலம் வந்தவர். புது வசந்தம் படம் மூலம், கடந்த 1990ம் ஆண்டில், தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி பதித்தார். இந்த படம், மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்து, விக்ரமன் பெரிய அளவில் பேசபட்டார்.
நான்கு இளைஞர்களுடன் ஒரு தோழியாக வரும் பெண், அவர்களது இசை கனவை நிறைவேற்றித் தந்து, இறுதியில் அவர்கள் நட்பு மட்டுமே போதும் என்ற நிலைக்கு மாறி நண்பர்களே என் வாழ்க்கை என்ற முடிவுக்கு வருவதே இந்த படம். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும், செம டிரண்டிங் ஆகி, பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. எஸ்ஏ ராஜ்குமார் இசையமைத்து இருந்தார்.
தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் உன்னை நினைத்து, வானத்தைப் போல, சூரிய வம்சம், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூவே உனக்காக, பிரியமான தோழி என பல வெற்றிப் படங்களை தந்தவர். இவரது படங்கள் என்றாலே, யதார்த்தமாகவும் அதே வேளையில் மிகவும் ரசிக்கும் விதமாகவும் இருக்கும்.
குறிப்பாக சூரிய வம்சம், சரத்குமாருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அதே போல, வானத்தை போல படமும் விஜயகாந்துக்கு பெரிய ஹிட் படமாக தந்தது. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம், கார்த்திக்குக்கு கம்பேக் படமாக அமைந்தது. இவரது படங்கள் எல்லாமே, ஏதேனும் ஒரு விதத்தில் மோடிவேஷன் படங்களாகவே இருக்கும்.
கடந்த 2014ம் ஆண்டில் நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கிய விக்ரமன், அதற்கு பிறகு எந்த படமும் எடுக்கவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக எந்த படமும் எடுக்காமல் இருந்து வருகிறார். இதற்கான காரணம், இப்போது தெரிய வந்துள்ளது. இனிமேல் அவர் படங்களை இயக்க முன்வருவாரா, என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா, குச்சுப்புடி கலைஞர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், காலில் பாதிப்பு காரணமாக, டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது, டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சையால், கால்கள் மிக மோசமடைந்தது. படுத்த படுக்கையாகி விட்ட அவரை கவனித்துக்கொள்ளவும், தனது சொத்துகளை விற்று மருத்துவ சிகிச்சைகளை பார்க்கும் நிலையில், விக்ரமன் இருந்து வருகிறார். இப்படி சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளால், படம் இயக்குவதே விக்ரமனுக்கு இப்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.





