கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்துமே செம ஹிட் ஆகியின. பின்னணி இசையும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2ம் பாகம் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 17ம் தேதி வெளியான நிலையில் இதுவரை 12 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. டிரெய்லரை பார்த்த ரசிகர்கள், புஷ்பா முதல் பாகத்தை போலவே 2ம் பாகமும் வெறித்தனமாக இருக்கும் என்று விமர்சித்து வருகின்றனர்.
புஷ்பா படத்தில் முதல் பாகத்தில் இடம்பெற்ற ஸ்ரீ வள்ளி, ஊ சொல்றியா மாமா, இது எங்க பேட்ட, சாமி சாமி போன்ற பாடல்கள் பெரிய அளவில் டிரண்டிங் ஆகின. அதிலும் சமந்தா குத்தாட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா ஐட்டம் பாடல் செம வைரலானது. இந்த பாடலை நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா பாடியிருந்தார்.
அதே போல் புஷ்பா 2 படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா குத்தாட்டம் போட்டிருக்கிறார். ஊ சொல்றியா மாமா அளவுக்கு இந்த பாடலும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று கூறப்படுகிறது. புஷ்பா 2ம் பாகமும் செம்மர கடத்தல் கதைக்களத்தில்தான் உருவாகி உள்ளது.
புஷ்பா முதல் பாகம் படத்துக்கு பாடல்கள், பின்னணி இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், புஷ்பா 2ம் பாகத்தில் பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். பின்னணி இசை அவர் அமைக்கவில்லை. அவருக்கும் இயக்குனருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பின்னணி இசை அமைக்க தேவி ஸ்ரீ பிரசாத் மறுத்துவிட்டதாகவும், படக்குழு தரப்பில் இருந்தே வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் உள்ளன.
இந்த சூழலில் புஷ்பா 2 படத்துக்கு பின்னணி இசையை இசையமைப்பாளர் தமன் அமைத்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் புஷ்பா 2 படத்துக்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தான் பின்னணி இசை அமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த உண்மை தகவலை தெலுங்கு ஊடகங்கள் மறைத்து, தமன் பெயரை குறிப்பிடுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. புஷ்பா 2 படத்தின் உண்மையான பின்னணி இசையமைப்பாளர் சாம் சிஎஸ் என படக்குழுவே அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.





