தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஹீரோக்களின் சம்பளம் எகிறி அடிக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ், தெலுங்கு சினிமா மற்றும் பாலிவுட்டில் ஹீரோக்களின் சம்பளம் எல்லாமே தாறுமாறுதான். அப்படியா என வியக்கும் அளவுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் பல ஹீரோக்கள் சம்பளத்தை அள்ளுகின்றனர்.
தமிழ் சினிமாவில் இப்போதைய நிலவரப்படி ரஜினி ரூ. 125 கோடி, கமல் ரூ. 150 கோடி, விஜய் ரூ. 200 கோடி, அஜீத் ரூ. 175 கோடி சம்பளம் வாங்குகின்றனர். நடிகைகளில் நயன்தாரா ரூ. 12 கோடி, திரிஷா ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகின்றனர். இயக்குநர்களில் ஷங்கர் ரூ. 30 கோடி, நெல்சன் ரூ. 10 கோடி, லோகேஷ் கனகராஜ் ரூ. 20 கோடி என வாங்குவதாக கூறப்படுகிறது. அனிரூத், ஒரு படத்துக்கு ரூ. 10 கோடியாக சம்பளத்தை தற்போது உயர்த்தி இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர் சிலர், அதிக சம்பளம் பெறுவதாக கூறப்பட்டாலும் சிரஞ்சீவி, ராம்சரண், வெங்கடேஷ், மகேஷ் பாபு, ராணா டகுபதி, பிரபாஸ், அல்லு அர்ஜூன் போன்றவர்கள் மிக அதிகமாக ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்க வாய்ப்புள்ளது. இதில் தெலுங்கு பட இயக்குநர் ராஜமவுலி ஒரு படத்துக்கு சம்பளமாக ரூ. 100 கோடி பெறுவதாக தகவல் உள்ளது.
இந்த வரிசையில் இப்போது தெலுங்க படவுலகை சேர்ந்த மற்றொரு இயக்குநர் சுகுமார், ரூ. 100 கோடி சம்பளம் பெற உ்ள்ளதாக தெரிய வந்துள்ளது.அதுவும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமே, இயக்குநர் சுகுமாருக்கு ரூ. 100 கோடி சம்பளம் நிர்ணயித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜமவுலியை அடுத்து 2வதாக ரூ. 100 கோடி சம்பளம் பெறும் இயக்குநர் என்ற பெருமை சுகுமாருக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த படம் புஷ்பா. பிளாக்பஸ்டர் மூவியாக இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. புஷ்பா படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
வரும் 2024ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. புஷ்பா படத்தின் பாகம் 1க்கு, இயக்குநர் சுகுமாருக்கு ரூ. 25 கோடி சம்பளம் தரப்பட்டது. அந்த படம் ரூ. 350 கோடி வசூலித்தது. அதனால் முதல் பாகத்தை விட, 2ம் பாகத்துக்கான வியாபாரம் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் ஓடிடி உரிமைக்கான வியாபாரம் எதிர்பார்த்த விலையை விட பலமடங்கு அதிகமாக போயுள்ளது. அதனால், ஓடிடி உரிமத்தில் கிடைத்த தொகையுடன் சேர்த்து, இயக்குநருக்கு ரூ. 100 கோடி சம்பளம் தர, தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. ஆனால், தமிழ் சினிமா இயக்குநர்களில் யாருமே இத்தகைய ஒரு சம்பளத்தை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





