நடிகர் ரஜினிகாந்துக்கு, தமிழ் சினிமாவில் மிக நெருக்கமான நண்பர்கள் சிலருண்டு. அவர்கள் எல்லாம் ஆரம்ப காலத்தில் இருந்தே நடிகர் ரஜினிகாந்துடன் நடித்தவர்களாக இருப்பார்கள். அவற்றில் மிக முக்கியமானவர் விஜயகுமார். தாய்வீடு, எஜமான் உள்ளிட்ட படங்களில் ரஜினியும், அவரும் இணைந்து நடித்திருப்பர். நாட்டாமை படத்தில் விஜயகுமார் நடித்த நாட்டாமை கேரக்டரில், தெலுங்கில் பெத்தராயுடு படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் ரஜினிகாந்த், விஜயகுமாருக்கும் இடையில் நெருக்கமான நட்பு உண்டு. விஜயகுமார் குடும்பம் சார்ந்த விஷயங்களில் ரஜினிகாந்த் நலம் விரும்பியாக அக்கறை காட்டி ஆலோசனை சொல்வார். அதுபோல் ரஜினிகாந்த் குடும்ப விஷயங்களிலும் விஜயகுமார், மஞ்சுளா தம்பதி தனது ஆலோசனைகளை கூறுவர். இருவரது வீடுகளிலும் நடிக்கும் விசேஷங்களிலும் குடும்ப உறவினர் போல இரு தரப்பிலும் கலந்துக்கொள்வர்.
இந்நிலையில் நடிகர் விஜயகுமார், மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதாவுக்கும், ஆகாஷூக்கும் பிறந்தவர் விஜய் ஸ்ரீஹரி. இவர் விஜயகுமாரின் பராமரிப்பில் வளர்ந்தவர். வெளிநாட்டில் கல்வி கற்ற நிலையில், இப்போது புதுமுக நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். பிரபுசாலமன் இயக்கத்தில் சிங்கம் என்ற தற்காலிக பெயர் வைத்துள்ள படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்துக்கு பெயர் வைக்கும் விழா நடந்தது. இந்த படத்துக்கு மாம்போ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரிஜினல் சிங்கம் நடித்துள்ளது. கும்கி படத்தில் யானையை நடிக்க வைத்தது போல, இந்த படத்தில் சிங்கத்தை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். இந்த படம் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்துக்கு மாம்போ என பெயர் சூட்டப்பட்ட அந்த விழாவில் பங்கேற்ற விஜயகுமார் பேசுகையில், இந்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கூறினேன். இந்த படத்தில் என் பேரன் விஜய் ஸ்ரீஹரி நடிப்பதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், பிரபு சாலமனுடன் 30 நிமிடங்களுக்கு மேல் பேசி, படத்தின் கதையை முழுவதுமாக கேட்டார். அதன்பிறகு சில சந்தேகங்களையும் கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டார்.
அதன்பிறகு, இந்த படத்தில் உங்கள் பேரனை தைரியமாக நடிக்கச் சொல்லுங்கள், படம் நிச்சயமாக பெரிய அளவில் ரசிகர்களை கவரும். படமும் பெரிய வெற்றியை பெறும் என்று கூறினார். அதன்பிறகுதான் இந்த படத்தில் என் பேரன் நடித்தார் என்று, நடிகர் விஜயகுமார் இந்த விழாவில் பேசுகையில் ரஜினிகாந்தின் பெருந்தன்மை குறித்து பேசியிருக்கிறார்.





