இயக்குனர் நெல்சன் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் திரைக்கதையை அமைப்பதில் பிஸியாக இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சமீபத்தில் உறுதியானது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஒரு பேட்டியில் கூறும்போது, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பேசியிருந்தார்.
அதில் தான் இடம்பெற்று இருப்பதாகவும், நெல்சன் திரைக்கதை அமைத்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். நெல்சனின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர் தோல்விகளை கொடுத்திருந்த ரஜினிகாந்திற்கும் இது ஒரு திருப்பமாக அமைந்தது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் டாப் இயக்குனர்கள் பட்டியலில் நெல்சன் இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் அவர் சின்ன திரையில், அது இது எது நிகழ்ச்சியில் இயக்குனராக இருந்தார். அங்கிருந்து சிம்புவின் வேட்டை மன்னன் திரைப்படத்தை எடுப்பதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் இயக்குனராகும் அந்தஸ்து கிடைத்தது.
ஆனால் அதன் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்த நெல்சன், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதில் பீஸ்ட் திரைப்படம் மட்டும் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய ஏமாற்றத்தை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
நெல்சனின் அறிமுக திரைப்படமான கோலமாவு கோகிலாவை ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வருகிறார்கள். அதற்குக் காரணம் அந்த படத்தில் இடம்பெற்ற டார்க் காமெடி தான். படமும் சற்று வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்ததால் கோலமாவு கோகிலா பலராலும் பேசப்பட்டது. நயன்தாரா அப்பாவி பெண்ணாகவும், தனக்கேற்ற தருணத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கதாபாத்திரமாகவும் நடித்து அசத்தியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்தியில் எடுக்க தான் திட்டமிட்டதாக கூறியிருக்கிறார் நெல்சன். ஆனால் அது வெறும் திட்டமாக மட்டுமே உள்ளதாகவும் இன்னும் அதை செயல்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அலியா பட்-ஐ வைத்து அந்த திரைப்படத்தை எடுக்க தான் திட்டமிட்டதாக கூறி இருக்கும் நெல்சன், எதிர்காலத்தில் கூட இது நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.





