மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படத்திலேயே வாகை சூடிய அவர், அடுத்ததாக கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை எடுத்து முக்கியமான இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார். தமிழ் சினிமாவில் தற்போது அவருக்கு இருக்கும் மார்க்கெட் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது.
மேடைக்கு மேடை தன்னை கமல் ரசிகன் எனக் கூறும் லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். மேலும் அதில், லோகேஷ் அறிமுகப்படுத்திய எல் சி யூ கான்செப்ட் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கைதி திரைப்படத்துடன் சில முக்கியமான காட்சிகளை விக்ரமில் இணைத்து சுவாரசியமாக கதை கூறியிருந்ததால் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் உடன் இணைந்த லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தை எடுத்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக சுமார் என்ற அளவிலேயே பேசப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் இரண்டாம் பாகம் தான். பலியிடுதல் உள்ளிட்ட கான்செப்ட்டை லோகேஷ் வைக்க அது ரசிகர்களிடம் அந்த அளவு ரீச் ஆகவில்லை.
இருப்பினும் லியோ திரைப்படம் வசூல் ரீதியாக எந்த குறையையும் வைக்கவில்லை. இது திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி இருந்த லோகேஷ் கனகராஜ், அந்த காட்சிகள் வெறும் கற்பனை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். மன்சூர் அலிகான் பார்வையில் இருந்தே அந்த காட்சிகளை விரிவு படுத்தியதாகவும், எது வேண்டுமானாலும் மாறலாம் என்றும் சூசகமாக அவர் பேசியிருந்தார்.
இப்படியான சூழலில் தற்போது அவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து இருக்கிறார். இதற்கான திரைக்கதை எழுதும் பணியை முடுக்கி விட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் தனது முந்தைய திரைப்படங்களைப் போல இது இருக்காது என்றும், இந்த படம் வேறு ஒரு கதை களத்தில் பயணிக்கும் என்றும் அவர் கூறினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை, கமலின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் ரிலேஷன்ஷிப் உள்ளிட்ட வார்த்தைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படத்தை எடுக்க இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த போஸ்டரின் சாராம்சம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.





