தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்று நோக்க வைத்திருக்கும் திரைப்படம் ராயன். தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்த தனுஷ், பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.
இதில் ராஜ்கிரண் மற்றும் ரேவதி ஆகியோருக்கு முக்கியமான கதாபாத்திரத்தை அவர் கொடுத்திருந்தார். இளம் வயதில் வந்த காதல் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட, முதிய வயதில் அதைத் தேடி போவது போல காட்சிகளை அமைத்திருந்தார் தனுஷ். மிகவும் எதார்த்தமாகவும், முதிர்ச்சி தன்மையுடனும் அவர் கிளைமாக்சை வைத்திருந்தார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்றாலும், தனுஷ் ஒரு தேர்ந்த இயக்குனர் என்பதை நின்று பேசியது. இதன் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க தனுஷ் கையில் எடுத்தார். நாகர்ஜூன் மற்றும் எஸ் ஜே சூர்யாவின் மையப்படுத்தி இதன் கதை எழுதப்பட்டு சூட்டிங்கிற்க்கும் சென்றார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதன் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன.
இதன் பிறகு, தற்போது தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்குவதற்கான பணியை முடித்து இருக்கிறார். இதற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் நடித்திருக்கிறார்கள். ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டது. சொன்ன தேதியில் இதற்கான சூட்டிங்கை தனுஷ் முடித்து காட்டினார். கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழாவும் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயனுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், டைட்டிலில் கூட அவருக்கு பிறகு தான் தனுஷ் மற்றும் தனது பெயர் வரும் என்றும் எஸ் ஜே சூர்யா கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராயன் திரைப்படத்திற்கு, தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருப்பதால் இந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படங்களிலேயே இதற்குத்தான் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது. படம் இரண்டு மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், இதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.





