நடிகர் தனுஷ், அவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து திருடா திருடி, தேவதையை கண்டேன், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான் போன்ற படங்களில் நடித்தார். அவரை ஆரம்பத்தில் உருவ கேலி செய்த சினிமா ரசிகர்கள் பலருண்டு.
ஆனால் திறமைக்கு உருவம் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக நல்ல படங்களில் நல்ல கேரக்டர்களில் தனுஷ் நடித்தார். குறிப்பாக செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம், தனுஷ் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது.
அதே போல், புதுப்பேட்டை படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, படிக்காதவன், வேங்கை போன்ற படங்கள் அவரை வெற்றி நாயகனாக்கியது. வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களால் முன்னணி 10 நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் தனுஷ்.
இந்நிலையில் ப பாண்டி என்ற படத்தை இயக்கினார் நடிகர் தனுஷ். முதியோர் காதல் உணர்வை மையப்படுத்திய இந்த கதையில் ராஜ்கிரண் – ரேவதியை நடிக்க வைத்திருந்தார், இப்போது ராயன் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ள தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற காதல் கலந்த காமெடி படத்தையும் இயக்கி இருக்கிறார்.
தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். 2 பாகங்களுக்கும் சேர்த்து ரூ. 100 கோடி சம்பளமாக பெறுகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படப்பிடிப்பு துவங்க உள்ளது.
நடிகர் தனுஷ் டைரக்ட் செய்துள்ள ராயன் படம் வரும் ஜூன் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற ஜூன் 2ம் தேதி, ஞாயிறு அன்று சென்னையில் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் இசை விழா நடக்கிறது. அதே நாளில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.





