தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் நடிகவேள் எம்ஆர் ராதா மகள் ராதிகா சரத்குமார். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ராதிகா அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி கமல் விஜயகாந்த் என பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இப்போதும் ராதிகா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகையாக வலம் வருகிறார் ஆரம்பத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் சமீப காலமாக அக்கா அம்மா சித்தி அண்ணி பாட்டி போன்ற பல்வேறு விதமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். ஆனால் இதுவரை நடிகை ராதிகாவுக்கு தேசிய விருது கிடைத்தது இல்லை. எனினும் மிகச் சிறந்த நடிகை என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
சமீபத்தில் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்து வெளியான தாய்க்கிழவி படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இந்த படத்தில் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் ராதிகா தாய்க்கிழவியாக நடித்து ரசிகர்களின் மனங்களை வென்றார். இந்த படத்தில் நிறைய சமுதாய விழிப்புணர்வு கருத்துகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வரும் தனது குருநாதர் இயக்குனர் பாரதிராஜாவை, ராதிகா சரத்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தாய்க்கிழவி படத்தை பார்த்ததாக இயக்குனர் பாரதிராஜா ராதிகாவிடம் கூறினார்.
மேலும் அந்தப் படத்தை பார்த்து விட்டு ராதிகாவை நேரில் அழைத்தும் அவர் பாராட்டி இருக்கிறார். இது குறித்த ஒரு வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இயக்குனர் பாரதிராஜாவை நலம் விசாரிக்கும் ராதிகா, தாய்க்கிழவி படம் பார்த்தீங்களாமே என்று கேட்கிறார். அதற்கு ஆமாம் பார்த்தேன். இந்த படத்தில் சிறப்பாக நடித்த உனக்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும் என்றும் பாரதிராஜா சொல்கிறார்.
அதைக் கேட்டு ஆச்சரியப்படும் ராதிகா, அப்படியா எனக்கு தேசிய விருது கிடைக்குமா? அப்படி கிடைத்தால் அந்த விருதை உங்கள் காலடியில் வைத்து அர்ப்பணிக்கிறேன் என்றும் சந்தோஷமாக கூறினார். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய குருநாதருக்கு இப்படி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தந்த ராதிகாவின் வீடியோ இப்போது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.





