கடந்த 1978ம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஒருமுறை ராதிகாவுக்கு கருணாநிதி கலையரசி என்ற பட்டம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை இப்போது தாய்கிழவி படம் மூலம் ராதிகா நிரூபித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 47 ஆண்டுகளாக இருந்து வரும் நடிகை ராதிகா சரத்குமார் இப்போது ரசிகர் மத்தியில் ஒரு மிகப்பெரிய கவனத்தைப் பெற்று இருக்கிறார். அதற்கு காரணம் அவர் நடித்துள்ள தாய் கிழவி என்கிற படம் தான். இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா மூதாட்டியாக நடித்திருக்கும் படம் தாய்க்கிழவி. இது அவரது 75 வது படம்.
தாய்கிழவி படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனமும் பேஷன் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்துள்ளன. வரும் பிப்ரவரி 20ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால் தாய்கிழவி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் சேட்டிலைட் வியாபாரம் காரணமாக இந்த படம் இப்போதே கணிசமான லாபத்தை சம்பாதித்து விட்டதாக கூறப்படுகிறது. காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டனிடம் பணிபுரிந்தவர் தாய்கிழவி படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் என்றும் சொல்லப்படுகிறது.
ராதிகா நடித்துள்ள தாய்கிழவி டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ராதிகாவை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இந்த ஆண்டில் சரத்குமார் நடித்த டியூட் கொம்புசீவி படங்களில் அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் அவரது மனைவி ராதிகாவுக்கு தாய்க்கிழவி படம் மூலம் மிகப்பெரிய பாராட்டும் வரவேற்பும் அடுத்த ஆண்டில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் ராதிகா சரத்குமார் இந்த படத்தில் ஒரு மாறுபட்ட நடிப்பை தந்திருக்கிறார். அதுவும் இறுக்கி கட்டிய கண்டாங்கி சேலை, அலட்சியமாக தூக்கி சொருகிய தலைமுடி காதில் பெரிய தண்டட்டி நெற்றியில் பச்சை குத்திய பொட்டு கழுத்தில் ஸ்படிகமாலை டயர் செருப்புடன் 75 வயது பவுனுத்தாயாக உருமாறி திரையில் நிற்கிறார் ராதிகா. அப்படியே உசிலம்பட்டி தமிழச்சியாக தெரிகிறார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில், ஆச்சரியமா இருக்கு. சினிமாவுக்குள் வந்து 47 வருஷம் ஆச்சு. இன்னும் எதுவும் சலிக்கவே இல்லை. இந்த சினிமா வாழ்க்கையை ஒரு பேரனுபவமாக இருக்கிறது. உணர்ந்ததில் அறிந்தது கொஞ்சம், அதிலும் நினைவில் சேமித்தது இன்னும் கொஞ்சம். இப்போது உண்மையாக தாய்கிழவி மாதிரி ஒரு படம் நடித்ததுதான் எனக்கு பெரிய சந்தோஷம் என்று ராதிகா சரத்குமார் கூறியிருக்கிறார்.





