தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, அண்மையில் தனக்கான லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை துறந்தார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் அவர், அவ்வபோது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதில் சில திரைப்படங்கள் வெற்றியையும் ருசிக்கின்றன.
இதில் 2020 ஆம் ஆண்டு, நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெற்றி பெற்றது. இது திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டாலும், விமர்சன ரீதியாக பலரும் அதனை வரவேற்றனர். இதனை சரவணன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகிய இருவர் இணைந்து இயக்கியிருந்தனர்.
இதில் ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடுத்தர குடும்பத்தில் பிறந்து முன்னேற முடியாமல் சங்கடப்படும் இளைஞர் ஒருமுறை தனது குலதெய்வத்திடம் முறையிடுவது போன்றும், அவரின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அம்மன் வருவது போன்றும் அந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது.
ஃபேண்டஸி முறையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலரையும் கவர்ந்ததால், மூக்குத்தி அம்மனை பலரும் வரவேற்றார்கள். இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அறிவித்த தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ், இயக்குநரை மாற்றியது.
அதன்படி சுந்தர் சி இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆர் ஜே பாலாஜியும், முதலில் திரிஷாவை வைத்து மாசாணியம்மன் படத்தை இயக்க இருந்தார். பிறகு தனது திட்டத்தை மாற்றி அவர் சூர்யாவுடன் கைகோர்த்தார். இப்படியான சூழலில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.
மிகப் பிரமாண்டமாக செட் போட்டு இந்த திரைப்படத்தை எடுக்க சுந்தர் சி திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முக்கியமான நடிகர் இருக்கப் போவதாக பேச்சு எழுந்தது. தற்போது அது யார் என்பது தெரிந்திருக்கிறது. அதன்படி அருண் விஜய் தான், நயன்தாராவிற்கு வில்லனாக நடிக்கப் போவதாக திரைத்துறை வட்டாரத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.





