தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். கடந்த 1997ம் ஆண்டில் வெளியான படம் சூர்யவம்சம். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அப்பா மகனாக நடித்த வெற்றிப் படம். இதில் நடிகை தேவயானி ராதிகா பிரியாராமன் மணிவண்ணன் ஆனந்தராஜ் அஜய் ரத்னம் ஆர் சுந்தர்ராஜன் ஜெய் கணேஷ் நிழல்கள் ரவி சிந்து உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் தேவயானி செய்த இட்லி உப்புமா பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவை திருமணம் செய்ய இந்த படம் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படத்தில் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிசெய்த இராஜகுமாரனை தான் பின்னாளில் நடிகை தேவயானி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
வழக்கமான அப்பா மகன் மோதல் கதைதான் இது. தன் மகனை கண்டாலே வெறுக்கும் மனநிலையில் இருப்பார் அப்பா சரத்குமார். படத்தின் இறுதியில்தான் தன் மகன் குறித்த நல்ல அபிப்ராயம் ஏற்படும். இதில் காதல் மனைவியாக்கி கலெக்டர் ஆகச் செய்து வாழ்விலும் ஜெயித்து காட்டும் கதாநாயகனின் கதை இது.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காமெடி காட்சிகளும் படத்துக்கு பலத்த வெற்றியை தேடித் தந்தது. விக்ரமன் இயக்கிய படங்களில் சூர்யவம்சம் மிக முக்கியமான ஒரு படமாகும். அதே போல் சரத்குமாருக்கும் நாட்டாமை படத்தை போலவே சூர்யவம்சம் பெரிய ஒரு அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யவம்சம் படம் 2ம் பாகமாக வெளிவர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக ஆசையாக உள்ளது. ஏனெனில் பல சூப்பர் ஹிட் படங்கள் இப்போது 2ம் பாகமாக வெளியாவது வழக்கமாகி விட்டது. ஆனால் 2ம் பாகத்தை இயக்கினால் முதல் பாகத்தை போலவே அதுவும் வெற்றிப் படமாக இருக்க அதிகளவில் மெனக்கெட வேண்டும் என்பதால் இயக்குனர் விக்ரமன் அதுகுறித்து யோசித்து வருகிறார்.
இதற்கிடையே நடிகை தேவயானியின் கணவரும், சூர்யவம்சம் படத்தில் பணிபுரிந்தவருமான இயக்குனர் இராஜகுமாரன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சூர்யவம்சம் படத்தின் 2ம் பாகத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். சூர்யவம்சம் படத்தில் மகன் சக்திவேல் கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என இயக்குனர் இராஜகுமாரன் கூறியிருக்கிறார். சரத்குமார், சிவகார்த்திகேயன் அப்பா மகனாக நடித்தால் காம்பினேஷன் நன்றாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.





