இயக்குனர் ராஜகுமாரன் என்பதை விட கோலிவுட்டில் நடிகை தேவயானியின் கணவர் என்பதே இவரது அடையாளமாக இருக்கிறது. ராஜகுமாரன் இயக்கிய 4 படங்களில் முதல் படமான நீ வருவாய் என படம் மட்டுமே வெற்றிப் படமாக இருந்தது. மற்ற 3 படங்களும் படுதோல்வி படங்களாக இருந்தன. அதனால் கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லை.
அதனால் யூடியூப் சேனல்களில் நேர்காணலில் அடிக்கடி கலந்துக்கொள்ளும் அவர் சினிமா நடிகர்கள் இயக்குனர்கள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சியான் விக்ரம் துருவ் விக்ரம் இயக்குனர் மகேந்திரன் குறித்த அவரது எதிர்மறை விமர்சனங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தை மட்டும் தான் பார்த்தேன். அவரது மற்ற எந்த படத்தையும் நான் பார்க்கவில்லை. அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு படைப்பாளியின் திறமை என்ன என்பது படம் பார்க்கும்போதே நன்றாக தெரியும்.
மாமன்னன் படத்தில் குறை சொல்லவே முடியாது. அந்த படத்தை வடிவேலுக்காக தான் பார்த்தேன். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மாரி செல்வராஜ் அழகாக எடுத்து இருப்பார். தேவயானி சொல்லி தான் பரியேறும் பெருமாள் படத்தை பார்த்தேன். அந்த படமும் நன்றாக இருந்தது. அவர்களுக்கு ஜாதியை வைத்து தான் படம் எடுக்க தெரிகிறது என்பதால் அப்படிப்பட்ட படங்களை எடுக்கிறார்கள். இதில் நாம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்களை நான் பார்த்ததே இல்லை. அவரது படத்தில் ரத்தம் சதை வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. ஏதாவது ஒரு நல்லதுக்காக அப்படி நடக்கிறது என்றால் பரவாயில்லை. ஆனால் எல்லா விஷயத்துக்குமே வன்முறையை அவர் கொண்டு வருகிறார். அவர் ஒரு நல்ல இயக்குனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் அவர் இன்றைய மார்க்கெட்டுக்கு ஏற்றபடி காபரே டான்ஸ் ஆடி இருக்கிறார். அவரை கிளாசிக் டான்ஸ் ஆட சொன்னாலும் இன்னும் அழகாக ஆடுவார். நான் அவர் படத்தை பார்க்கவில்லை என்றாலும் அவர் மிகவும் திறமைசாலி தான் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார். இப்படி முன்னணி இயக்குனர்களை ராஜகுமாரன் கலாய்த்து பேசியிருப்பது இணையத்தில் வைலராகி வருகிறது.





