இந்திய சினிமா போற்றும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ராஜமவுலி. ஆரம்பத்தில் இருந்தே தெலுங்கு திரையுலகில் அவர் பிரபலமாக இருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவர் பரீட்சையமானது நான் ஈ திரைப்படத்தில்தான். ஒரு ஈ எப்படி வில்லனை பழி வாங்குகிறது என்பதை தான் அவர் அந்த திரைப்படத்தில் காட்டி இருப்பார்.
ஆனால் எந்த ஒரு இடத்திலும் அதற்கான திரைக்கதை தனது விறுவிறுப்பை குறைத்து இருக்காது. அந்த அளவுக்கு ஜெட் வேகத்தில் படம் இருக்கும். எமோஷன் காட்சிகளும் இருக்கும். காதலும் இருக்கும். இப்படி ஒரு பேண்டஸி திரைப்படத்தை இனி யாராலுமே கொடுக்க முடியாது என பலரும் ஆச்சரியப்படும் வகையில் அந்த திரைப்படத்தை அவர் அமைத்தார்.
இங்கிருந்து ராஜமௌலியின் கிராஃப் உயர ஆரம்பித்தது. தொடர்ந்து இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு, பாகுபலி திரைப்படத்தை கொடுத்தார். இதன் முதல் பாகம் வெளியாகி கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வி இந்தியா முழுவதும் இருந்தது. எதற்காக இப்படி ஒரு முடிவு என்று ராஜமவுலி செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ரிலீஸ் செய்யப்பட அதில் அத்தனை பதிலையும் கொடுத்து அசர வைத்தார் ராஜமவுலி. சொல்லப்போனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாதி மிக நன்றாக இருப்பதாக பலரும் கூறினார்கள். அதற்கு ஏற்ற வகையில் படத்தின் திரைக்கதையும் வசனங்களும் அமைந்தன.
இதன் பிறகு ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை அவர் இயக்கினார். இந்த முறை அந்த திரைப்படம் உலக அளவில் கவனம் பெற்றது. அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றது. இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்திற்காக ராஜமவுலி மகேஷ் பாபுவுடன் இணைந்துள்ளார்.
ராமாயணத்தை மையப்படுத்தியே இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். இதில் பிரியங்கா சோப்ரா மற்றும் மலையாள நடிகர் பிரிதிவிராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் மகேஷ்பாபுவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட நிச்சயம் படத்தில் இருந்து அப்டேட் வரும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். அப்படியான சூழலில் வெறும் ஒரு புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு இருக்கிறார் ராஜமௌலி. அதில் படத்தின் முதல் வீடியோ நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்றும், இது உலகளாவிய பயணம் எனவும் கூறியிருக்கிறார்.





