தமிழ் சினிமாவில் இயக்குனராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், நடிகர் தனுஷின் அண்ணன், நடிகை சோனியா அகர்வாலின் முன்னாள் கணவர் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. சமீபகாலமாக நல்ல நடிகராகவும் செல்வராகவன் தன்னை நிரூபித்து வருகின்றனர்.
குறிப்பாக சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கிய நடித்த ராயன் படத்தில் சேகர் கேரக்டரில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் செல்வராகவன். அதுமட்டுமின்றி மார்க் ஆண்டனி, பகாசுரன், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் செல்வராகவன். அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இயக்குனர் கௌதம் மேனன் படங்களில் நடித்துவந்த நிலையில் இப்போது மீண்டும் டைரக்ஷனில் ஆர்வம் காட்டி வருகிறார். படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த மிஷ்கின், இப்போது நடிப்பில் ஆர்வம் காட்டுகிறார். சவரக்கத்தி, மாவீரன், லியோ படங்களை தொடர்ந்து இப்போது டிராகன் படத்திலும், அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் மிஷ்கின் நடிக்க உள்ளார்.
இப்படி நடிகர்கள் இயக்குனராகவும், இயக்குனர்கள் நடிகராவதும் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. இப்போது செல்வராகவனும் நல்ல நடிகராக மனதுக்கு பிடித்த நடிப்பை ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக பகாசுரன் படத்திலும், ராயன் படத்திலும் செல்வராகவன் நடிப்பு மிகுந்த கவனம் பெற்றது.
இந்நிலையில் நடிகராக ரசிகர்களை கவர்ந்த செல்வராகவன், மீண்டும் இயக்குனராக முழுகவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் 50 சதவீதம் படப்பிடிப்பை முடித்த நிலையில், மீண்டும் 50 சதவீதம் படப்பிடிப்பை நடத்துவதில் இப்போது தீவிரம் காட்டி வருகிறார்.
அதே போல் செல்வராகவன் ஏற்கனவே இயக்கிய ஆயிரத்தின் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்களின் 2ம் பாகத்தை இயக்குவதிலும் அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை துவங்கி இருக்கிறார். இந்த 3 படங்களையும் முடித்துவிட்டு, பிறகுதான் நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்கிடையே சில படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளையும் செல்வராகவன் முற்றிலும் மறுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





