நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1977ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நுழைந்தார். கே பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் ஸ்ரீவித்யா, ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கே பாலசந்தர் படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்திலும் கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் நடித்தார்.
அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், தப்புத்தாளங்கள், அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும், ஆடுபுலி ஆட்டம், தாயில்லாமல் நானில்லை. உருவங்கள் மாறலாம், அக்னி சாட்சி, நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.
இப்படி அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்தன. அதனால் தயாரிப்பாளர்கள் கணிசமான லாபம் அடைந்தனர். ஆனால் ரஜினி, கமலுக்கு வழக்கமான சம்பளமும், இருவரும் இணைந்து நடிக்கும் விதமான படங்களுமே அதிகளவில் வந்தன.
இது நீடித்தால் இப்படியே தமிழ் சினிமா நம்மை முடக்கி விடும். தனிப்பட்ட முறையில் இருவரது வளர்ச்சியும் இல்லாமல் போய்விடும். அதனால் சினிமாவில் இனி தனித்தனி வழிகளில் பயணிப்போம். அப்போதுதான் நமக்கான உயரங்களை அடைய முடியும். நம் உழைப்புக்கான சம்பளத்தையும் பெற முடியும் என தீர்மானித்தனர். அந்த வகையில் ரஜினி, கமல் இருவரும் கடைசியாக 1981ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கிய தில்லுமுல்லு படத்தில் நடித்தனர். இதில் ரஜினி இந்திரன், சந்திரன் என கேரக்டர்களில் நடித்திருப்பார். கடைசி காட்சியில் வக்கீலாக கமல் வருவார்.
அதன் 42 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக நடிக்கவே இல்லை. பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டும் இருவரும் ஒன்றாக நடிக்க சம்மதிக்கவில்லை. 42 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் ஒரு சூழல் தமிழ் சினிமாவில் உருவாகி இருக்கிறது. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பயங்கர உற்சாகத்தை தந்துள்ளது.
நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கும் இளையராஜா படத்தில்தான் இந்த தரமான சம்பவம் நடக்கப் போகிறது. இந்த படத்தில் இளையராஜாவின் நீண்ட கால நெருங்கிய நண்பர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே ஜோடியாக தோன்றி நடிக்க உள்ளனர். இதில் இளையராஜாவுடன் அவர்களுக்கு ஏற்பட்ட தொடர்புகளை காட்சிபடுத்தும் விதமாக இருவரும் நடிக்கின்றனர். 42 ஆண்டுகளுக்கு பின், இருவரும் ஒரே படத்தில் நடிப்பது இளையராஜா படத்தில் கைகூடியிருக்கிறது.





