நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஜெயிலர் 2 படப்பிடிப்பை நடத்த இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளார். ஆனால் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 படத்தை முடித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்கள் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ளாமல் முழு ஓய்வில் இருக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அடுத்த 2026ம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை அவரது ஓய்வு காலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இமயமலைக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்று ரஜினி ஓய்வு எடுக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த 6 மாத ஓய்வு காலத்தில் ரஜினிகாந்த், தனது வாழ்க்கை வரலாறு அதாவது தனது சுயசரிதையை எழுத திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பஸ் கண்டக்டராக துவங்கிய தனது வாழ்க்கை பயணத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக சூப்பர் ஸ்டாராக மாறியது எப்படி என்பது குறித்தும் தனது குடும்பம் நட்பு சினிமா பயணம் ஆன்மிகம் என பல தளங்களில் தனது வாழ்க்கை அனுபவங்களை இதில் விவரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் எடுக்கும் 6 மாத கால ஓய்வு என்பது மன அமைதி தேடுதல் சுயசரிதை மறறும் ஆன்மிக பயணம் என சில காரணங்கள் வெளிப்படையாக சொல்லப்பட்டாலும் இதில் மறைமுகமாக சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அடுத்த ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு காட்டாதவராக நடுநிலையாளராக தன்னை வெளிப்படுத்த விரும்புகிறார்.
ஆனால் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ரஜினிக்கு தொடர்ந்து அழைப்பு வருகிறது. அடுத்த ஆண்டில் தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ரெயின்ட் மூவிஸ் படத்தில் நடித்தால், அதுபற்றிய தகவல்கள் வெளியானால் ரஜினிகாந்த் திமுக ஆதரவாளர் போன்ற ஒரு மாய தோற்றம் ஏற்படும். திமுகவினரே அப்படி ஒரு தோற்றத்தை சமூக வலைதளங்களில் பரப்பவும் அதிக வாய்ப்புள்ளது.
உண்மையில் ரஜினிகாந்த் பாஜகவின் ஆதரவாளர் என்பதுதான் உண்மை. திமுக தலைவர் ஸ்டாலினுடன் நட்பில் இருந்தாலும் கமல்ஹாசன் போல விசுவாசியாக ரஜினி எப்போதும் இருக்க விரும்பியதில்லை. அதனால்தான் 6 மாதங்களுக்கு திமுகவின் வலையில் சிக்காமல் ஒதுங்கிக்கொள்ள இந்த பயோபிக் எழுதும் ஓய்வு திட்டத்தை அறிவித்திருக்கிறார். தேர்தல் முடிவுகளை பொருத்து அடுத்த படத்தில் நடிப்பது, தயாரிப்பு நிறுவனத்தை தீர்மானிப்பது என்கிற தீர்க்கமான முடிவில் ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.





