தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இந்த படத்தில் தினேஷ் கலையரசன் நந்திதா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காதல் கதையில் இது ஒரு ஜாலியான படமாக இளம் வயதினர் விரும்பும் ஒரு கதைக்களத்தில் உருவாகி இருந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கினார். சுவரில் வரையப்படும் அரசியல் விளம்பரத்தை மையப்படுத்திய இந்த கதையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெட்ராஸ் படமும் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. ரசிகர்களிடம் நல்ல அடையாளமும் கிடைத்தது.
அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆகிய 2 படங்களை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கினார். இதில் கபாலி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் காலா வணிக ரீதியாக பெரிய வரவேற்பை பெறாத போதிலும் இந்த படத்தின் கதைக்களம் பலரையும் ரசிக்க வைத்தது. அதன்பிறகு சார்பட்டா பரம்பரை தங்கலான் உள்ளிட்ட 7 படங்களை பா ரஞ்சித் தந்திருக்கிறார்.
இயக்குனர் பா ரஞ்சித் தனது படங்களில் சாதிய கொடுமைகள் சமுதாய ஏற்ற தாழ்வு உரிமைகள் குறித்து பேசுவதாக ஆரம்பத்தில் இருந்தே கடும் விமர்சனங்கள் இருந்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது, முதலில் என்னை மட்டும் திட்டிக்கொண்டு இருந்தார்கள். அப்புறம் மாரி செல்வராஜை திட்டினார்கள். அந்த சமயத்தில் வெற்றிமாறன் சார் அசுரன் படம் எடுத்தார். அப்புறம் அவரையும் திட்ட ஆரம்பித்து விட்டனர்.
எப்பவுமே திட்டுகிற இடத்தில் என்னோட போட்டோதான் இருக்கும். இப்போது மாரி செல்வராஜ், வெற்றிமாறன் சார் போட்டாக்களும் இருக்கிறது. தமிழ் சினிமாவை அழித்த 3 இயக்குனர்கள் என்று எங்களுக்கு பெயர் வந்துவிடும். ஒரு வருடத்தில் 300 படம் வருகிறது. 2 வருடங்களில் 600 படம் வந்திருக்கும். எத்தனை இயக்குனர்கள் அந்த படங்களை இயக்கியிருப்பாங்க? நான் 2 வருடங்களுக்கு ஒரு படம் எடுக்கிறேன். மாரி 5 படம் இயக்கி இருக்கிறான். வெற்றி சார் 3 வருடத்தில் ஒரு படம் இயக்குகிறார்.
கடந்த 10 வருடங்களில் 7 படம்தான் நான் எடுத்து இருக்கேன். அப்போது அந்த 7 படங்களில் தமிழ் சினிமா சீரழிஞ்சு போய் விட்டதா? அப்போது மற்ற இயக்குனர்கள் எல்லாம் என்ன பண்றாங்க? தமிழ் ரசிகர்கள் நீங்கள் அப்போது எல்லா படத்தையும் ஓட வைத்திருக்கலாமே என்று இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசமாக அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





