பெங்களூரில் நடத்துநராக பணியாற்றிய ரஜினிகாந்த் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் சேர்ந்தார். பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே சில மேடை நாடகங்களில் நடித்த அவரது திறமையை பார்த்து ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் ஊக்கப்படுத்தியவர். அதனை ரஜினியும் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் ராஜ் பகதூர் அளித்த சமீபத்திய பேட்டியில் ரஜினி குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “ரஜினி நடித்த படையப்பா படத்தின் ஷூட்டிங்கை ஒருமுறை பார்ப்பதற்காக சென்றேன். அப்போது ரஜினி என்னிடம் இந்தப் படத்தில் ஒரு சீனில் என்னுடைய நண்பர் போன்று நடிக்கிறாயா என்று கேட்டார்.
நான் அதற்கு அய்யோ அதெல்லாம் எனக்கு செட் ஆகாது ரஜினி என்று சொன்னேன். அதற்கு ரஜினியோ இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் செய் போது என்றார். பிறகு எனக்கு மேக்கப், காஸ்ட்யூம் எல்லாம் போட்டார்கள். ஓஹோ கிக்கு ஏறுதே பாடல் வருவதற்கு முன்பு நான் தோன்றிய காட்சி இருக்கும். அந்தக் காட்சி என்னவென்றால் நான் ரஜினியை பார்த்து இவனை அரசியலுக்கு வா என்று சொன்னால் வர மாட்டேங்கிறான் என்பதுதான்.
இதனை பார்த்த கே.எஸ்.ரவிக்குமார், இல்லை ரஜினியை டா போட்டு அழைக்க வேண்டாம். ஏனென்றால் அவர் மிகப்பெரிய ஸ்டார் என்றார். இதனை கவனித்துவிட்ட ரஜினிகாந்த் இல்லை இல்லை ராஜ் பகதூர் என்னை டா போட்டே அழைக்கட்டும் என சொல்லிவிட்டு என்னிடம் வந்து நீ அப்படியே கூப்பிடு என சொல்லிவிட்டார். பிறகுதான் அப்படி பேசி நான் நடித்தேன்.
பாட்ஷா படம் அவனது கரியரில் முக்கியமான படம். முன்பெல்லாம் ரஜினிகாந்த் என்னுடைய வீட்டுக்கு இரவில் மாறுவேஷத்தில் வருவான். நானும் அவனும் நைட் முழுக்க குடிப்போம். பல விஷயங்கள் பேசுவோம். பிறகு காலை அங்கிருந்து சென்றுவிடுவான். அவனுடைய படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு என்னுடைய விமர்சனத்தை சொல்ல வேண்டும் என்பதுதான் அவனுடைய எதிர்பார்ப்பு.
சில முறை அவனிடம் நான் இந்தந்த இடத்தில் ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறாய் என சொல்லியதுண்டு. அவனும் அதை பொறுமையாக கேட்டுக்கொள்வான். அதேபோல் ஜெயிலர் படம் தொடர்பான என்னுடைய விமசனத்துக்கும் ரஜினி காத்திருந்தான். படம் பார்த்த நான் அவனிடம், சூப்பராக இருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் பாட்ஷாவைவிட அதிகம் வசூலிக்கும் என கூறினேன்” என்றார்.





