சின்னத்திரையில் வெளியான அது இது எது நிகழ்ச்சி மூலம் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதகளப்படுத்த, அவரைப் பின்னாலிருந்து இயக்கினார் நெல்சன். சின்னத்திரையில் அவருக்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, வெள்ளித்திரைக்கு சென்ற அவர் சிம்புவை வைத்து முதன்முதலாக வேட்டை மன்னன் என்னும் படத்தை இயக்கினார். படத்தின் தலைப்பை கேட்டதிலிருந்தே சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. தனது முதல் படத்திற்கே இப்படி ஒரு நிலை வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான இயக்குனர் நெல்சனுக்கு, அதிலிருந்து மீள சில நாட்கள் தேவைப்பட்டது.

இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் கோலமாவு கோகிலா. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அந்த திரைப்படம், டார்க் காமெடி ரகத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. தனக்கு கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை எல்லாம் சிக்ஸர் விளாசி, மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார் யோகி பாபு. படம் தொடங்கியதில் இருந்து இறுதிவரை தொடர்ந்த நகைச்சுவை காட்சிகளாலும், நயன்தாராவின் அப்பாவித்தனமான நடிப்பினாலும் படம் திரையரங்குகளில் திருவிழா கோலம் பூண்டது.
கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் எனும் திரைப்படத்தை எடுத்தார் நெல்சன். குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படமும், நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்தது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் தங்களுக்கே உரித்தான காமெடியில் ரசிகர்களை குஷி படுத்த, படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கோலமாவு கோகிலா படத்தில் வரும் நயன்தாரா கதாபாத்திரம் போலவே, இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு சைலன்ட்டான ரோலை கொடுத்திருந்தார் இயக்குனர் நெல்சன்.

அதுவரை திரையரங்குகளில் கலகலப்பான சிவகார்த்திகேயனை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு, டாக்டர் திரைப்படத்தில் வந்த எஸ்.கே.வின் வருண் கதாபாத்திரம் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. அனிருத்தின் தீம் இசையும் படத்திற்கு பலம் சேர்க்க, முதல்முறையாக சிவகார்த்திகேயன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் அள்ளியது. கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களில் கிடைத்த வரவேற்பால் விஜயை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குனர் நெல்சன்.
பீஸ்ட் என்ற பெயரில் உருவான அந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. ஒரு வணிக வளாகத்தை பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பதும், அவர்களிடமிருந்து ஹீரோ மக்களை காப்பதும்தான் படத்தின் ஒற்றை வரிக்கான கதைக்களம். ஆனால் தொய்வான திரைக்கதை மற்றும் எடுபடாத நகைச்சுவை காட்சிகளால் பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் சமூக வலைதளத்தில் பலரும் நெல்சனை கிண்டல் கேலி செய்து வந்தனர். இந்த நிலையில்தான் ஜெயிலர் திரைப்படம் மூலம் ரஜினியுடன் இணைந்தார் நெல்சன்.
மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என ஏராளமானோர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. காவாலையா, டைகர்கா ஹுக்கும் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முக்கியமான தலைவனை மீட்பதற்காக ஒரு கும்பல் தொடர்ந்து முயற்சி செய்வதாகவும், மேலும் அந்த சிறையில் பலரும் பிரச்சனையில் சிக்கி தவிப்பதாகவும் கதை எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அனைத்தையும் ஒற்றை ஆளாக ஜெயிலர் சமாளிப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் உற்சாகமடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், கண்டிப்பாக தலைவருக்கு ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





