சென்னையில் வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் தான் ஐசரி கணேஷ். மிகப்பெரிய கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் இவர் தமிழ் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம் தான் இவரது தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமாக அமைந்தது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.
இதன்பிறகு தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ஐசரி கணேஷ். போகன், ஜூங்கா, எல் கே ஜி, தேவி 2 ஆகிய திரைப்படங்களும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் தான் வெளியாகின. இதில் அவருக்கு மிகப்பெரும் லாபத்தை பெற்று கொடுத்தது கோமாளி திரைப்படம் தான்.
இப்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் பிரதீப் ரங்கநாதன்தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் கதாநாயகனாக ரவி மோகன் நடித்திருந்தார். தற்போது ரவி மோகனை வைத்து ஜீனி என்னும் திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார் ஐசரி கணேஷ். மிகப்பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இது மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளது. இதற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட் தமிழ் சினிமாவே உற்றுநோக்கும் வகையில் அமைந்தது. தொடர்ந்து தனுஷ் விக்னேஷ் ராஜா கூட்டணியில் ஒரு திரைப்படத்தையும் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இப்படியான சூழலில் அவரது மகள் ப்ரீத்தா கணேஷின் திருமணம் வெகு விமர்சையாக சென்னையில் நடைபெற்றது. இ சி ஆர் சாலையில் உள்ள ஒரு மஹாலில், இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தன. திருமண நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்த ரவி மோகன், தனது தோழியும் பாடகியுமான கென்சிகாவுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இந்த திருமண நிகழ்வில் வெளியாகி இருக்கும் காலை உணவு பட்டியலில் பலர் புருவங்களையும் உயர்த்த செய்திருக்கிறது. தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா என நான்கு மாநிலங்களில் ஃபேமஸான காலை உணவுகளை அடுக்கி இருக்கிறார் ஐசரி கணேஷ். தொடர்ந்து மாலத்தீவிலும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





