தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக கோலோச்சிய எம்ஜிஆர் சிவாஜி கணேசன் இருவரும் இணைந்து நடித்தது கூண்டுக்கிளி என்ற ஒரு படம் மட்டுமே. மீண்டும் அவர்கள் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் ஆரம்பத்தில் நிறைய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் ரஜினி கமல் இருவருமே கலந்து பேசிதான், இனி சேர்ந்து நடிக்கக் கூடாது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்தனர். இதன்பிறகு 1979 முதல் 2025ம் ஆண்டு வரை 46 ஆண்டுகளாக இருவரும் ஒரு படத்திலும் கூட இணைந்து நடிக்கவில்லை. ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிப்பது எப்போது என்று பல ஆண்டுகளாகவே ரசிகர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கின்றனர்.
இப்போது 46 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு ஒரு சந்தோஷமான பதில் கிடைக்கிறது. ரஜினியும் கமலும் அடுத்து இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இயக்கப் போவது விக்ரம் கூலி படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் என்பதும் உறுதியாகி விட்டது.
ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் கமல் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த 2 படங்களையும் முடித்து விட்டு ரஜினி கமல் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு கைதி 2 படத்தையே லோகேஷ் கனகராஜ் கையில் எடுக்க உள்ளார்.
விஜய் நடித்த லியோ படமும் சொதப்பி விட்டது, கூலி படத்துக்கும் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துவிட்டன. இதையும் தாண்டி 46 ஆண்டுகள் கழித்து ரஜினி கமல் இணையும் அபூர்வமான படத்தை இயக்கப் போவது லோகேஷ் கனகராஜ் தானா என்ற பதட்டமும் பயமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருக்கவே செய்கிறது.
ஆனால் கமல் இருக்க பயமேன், என்ற யுக்திதான் இங்கு நம்பிக்கை தருகிறது. ரஜினி கமல் இணையும் இந்த படத்தை பொருத்த வரை இயக்குனர் லோகேஷ் கனகராஜாக இருந்தாலும் கதை திரைக்கதை படத்தின் கதைக்களம் மற்ற கேரக்டர்கள் என எல்லாவற்றிலும் கமல் என்றும் அந்த சகலகலா வல்லவனின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். அதனால் இந்த படத்தை கமல்ஹாசன் அற்புதமான படைப்பாக ரசிகர்களுக்கு தருவதில் பெரும்பணி செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை.





