தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். 12 ஆண்டுகளுக்கு முன் மெரினா என்ற தனது முதல் படத்தில் நடிக்க ரூ. 10 ஆயிரம் சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன், இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 1965 என்ற தனது 25வது படத்தில் நடிக்க ரூ. 75 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே ஜாலியான காதல் கதைகளை, காமெடி படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை தன்பக்கம் வசப்படுத்தியவர் சிவகார்த்திகேயன். அதே நேரத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நாயகிகளை தன் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அந்த வகையில் அதிக கவனம் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது.
மெரினா படத்தை தொடர்ந்து மனம் கொத்திப் பறவை எதிர்நீச்சல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் காக்கிச்சட்டை ரெமோ வேலைக்காரன் மான் கராத்தே போன்ற வெற்றிப் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் ஹீரோ பிரின்ஸ் போன்ற தோல்வி படங்களையும் தந்தார்.
பிறகு டாக்டர் மாவீரன் படங்கள் பெரிய வெற்றியை தந்த நிலையில் அயலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால் அடுத்து அவர் நடித்த அமரன் படம் பெரிய வரவேற்பை, அபார வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை ரங்கூன் பட டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் இந்த படம் கடந்தாண்டில் வெளியாகி பெரிய ஹிட்டை தந்தது.
வழக்கமாக ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற நடிகர்களின் படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் பாட்ஷா படையப்பா குணா கில்லி போக்கிரி என சில படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் என்ற படமும் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டில் வெளியான ரஜினி முருகன் படத்தை பொன்ராம் டைரக்ட் செய்திருந்தார். சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ராஜ்கிரண் கு ஞானசம்பந்தன் சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் முதன்முறையாக ரி ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





