நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் லால் சலாம் வேட்டையன் என 2 படங்கள் வெளியாகின. இதில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம் பெரிய பிளாப் படமாக இருந்தது. ரஜினி கேமியோ ரோலில் நடித்ததாக சொல்லப்பட்டாலும் ரஜினி இதில் நிறைய காட்சிகளில் நடித்திருந்தும் படம் எடுபடவில்லை. டாகுமென்டரி படம் போல இருந்ததாக விமர்சனம் எழுந்தது.
அடுத்து தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் வேட்டையன் வெளியாகி உலகளவில் ரூ. 265 கோடி வசூலித்தது. இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன் மஞ்சுவாரியார் கிஷோர் ரித்திகா சிங் அபிராமி துஷாரா விஜயன் ராணா டகுபதி பகத் பாசில் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. என் கவுண்டர் கருவை மையப்படுத்திய கதையாக இருந்தது.
இந்த படம் லைகா நிறுவனத்துக்கு போதிய லாபத்தை தந்தாலும் விமர்சன ரீதியாக வேட்டையன் படம் ரசிகர்களுக்கு அதிருப்தியே தந்தது. இது 1980 90களில் வர வேண்டிய படம் என்று படம் பார்த்த ரசிகர்கள் வெளிப்படையாக விமர்சித்தனர். பகத் பாசில் துஷாரா விஜயன் மட்டுமே வேட்டையன் படத்துக்கு பக்கபலமாக இருந்தனர் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு கூறினர்.
இந்த சூழலில் இப்போது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு பின் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையே இயக்குனர் மாரி செல்வராஜ், ரஜினியை சந்தித்த தகவல் வெளியாகி உள்ளது.
பரியேறும் பெருமாள் கர்ணன் மாமன்னன் வாழை ஆகிய 4 படங்களை மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். அடுத்து துருவ் விக்ரம் நடித்த பைசன் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். இதுவரை வெளியான மாரி செல்வராஜின் 4 படங்களே சாதியம் உரிமைகளை பேசும் படங்களாகவே உள்ளன. குறிப்பாக அடக்குமுறை அதிகார வர்க்கம்தான் அவரது படங்களின் மையக் கருவாக இருந்து வருகின்றன.
இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்தை இயக்குனர் மாரி செல்வராஜ் 2 முறை நேரில் சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். இதில் ஒருமுறை தயாரிப்பாளர் எஸ் தாணு ரஜினியிடம் மாரி செல்வராஜை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் கதை கேட்ட ரஜினி நோ சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். கமர்ஷியல் ஹீரோவான தன்னை மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் வேறு மாதிரி காட்டி விட்டால், இமேஜ் டேமேஜ் ஆகி விடும். எதற்கு ரிஸ்க் என்று ரஜினி மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





