பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை எண்ணற்ற இயக்குநர்கள் இருந்தாலும், அவர்களில் பெண் இயக்குநர்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயேதான் உள்ளனர். இதில் குறிப்பிட்டத்தக்க வெற்றியை கொடுத்து பலராலும் கவனிக்க பெற்றவர் சுதா கொங்கரா. இயக்குநர் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணி புரிந்த அவர், அங்கிருந்து தனது திரையுலக கனவை துரத்த ஆரம்பித்தார்.
கதை உருவாக்கத்தில் தொடர்ந்து மெனக்கெட்டு வந்த சுதா கொங்கராவிற்கு, முதல் திரைப்படமாக துரோகி அமைந்தது. விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஏன், பலருக்கும் இப்படியொரு திரைப்படம் வெளியானது கூட தெரியாமல் இருந்திருக்கலாம். இதன்பிறகு, தனது அடுத்த படத்திற்கான வேரை ஆழமாக ஊன்ற முடிவு செய்த சுதா கொங்கரா, பொறுமையாக காத்திருந்து இறுதிச்சுற்று திரைப்படத்தை எடுத்தார்.
மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், மூர்க்கத்தனமாக பயிற்சியாளராக மாதவனும், அவரை காதலிக்கும் மாணவி ரித்திகா சிங்கும் காட்சிக்கு காட்சி அசத்தியிருந்தனர். சலிப்பு தட்டாத திரைக்கதையால் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம், சுதா கொங்கராவிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
இதன்பிறகு, சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. கர்நாடகாவைச் சேர்ந்த கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. குறைந்த விலைக்கு ஏழைகள் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற துடிப்புமிக்க நபராக நடித்து சபாஷ் போட வைத்திருந்தார் சூர்யா. திரையரங்குகளில் வெளியாக நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக, சூர்யாவிற்கு சூரரைப் போற்று திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் சிறந்த படத்திற்கு தேசிய விருதை இந்த படமும், சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் பெற்றனர். இதற்கு சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்தது.
அவர் சிம்புவை வைத்து இயக்கப்போவதாக கோலிவுட்டில் பேசப்பட்டது. அதே சமயம், கங்குவா படத்தில் பிஸியாக இருக்கும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறனுடன் சேர்ந்து வாடிவாசலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக தற்போது மீண்டும் சுதா கொங்கரா – சூர்யா இணைந்துள்ளனர்.
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில், துல்கர் சல்மான், நஸ்ரியா பகத், விஜய் வர்மா ஆகியோர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு புறநானூறு என டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதில், 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுக்கிறாராம் சுதா கொங்கரா. கல்லூரி மாணவர் ரோலில் சூர்யா வருகிறாராம். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.





