சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தயாராகி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளிவர இருக்கிறது ஜெயிலர் திரைப்படம். இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். ஜெயிலர் படம் மட்டுமல்லாது ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்திலும் நடித்து வந்தார். அந்த வருடத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக மாலத்தீவு சென்ற ரஜினிகாந்த் அங்கு சில நாட்கள் கழித்துவிட்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் சமயத்தில் அவர் சென்னையில் இருக்க மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பொதுவாகவே தனது படங்கள் முடிவடைந்ததும் இமயமலை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இமயமலை செல்லாமல் இருந்தார்.
காலா, 2.0 போன்ற படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகும் இமயமலை சென்ற அவர் அதன் பிறகு இமயமலை செல்லவில்லை. தற்போது ஜெயிலர் படம் வெளிவர உள்ள நிலையில் அவர் ஆகஸ்ட் 6ஆம் தேதி இமயமலை சென்று அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து கேதரிநாத், பத்ரிநாத் ,பாபாஜி குகை போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு அவர் செல்ல உள்ளார்.
பொதுவாக ரஜினிகாந்த் இப்படி இமயமலை செல்லும் போது அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதாவது அவரது மகள்களில் யாராவது ஒருவர் அவருடன் செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை ரஜினிகாந்தோடு அவரது மகள்கள் செல்லப் போவதில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதே சமயம் இமயமலை செல்வதற்கு முன்பாக ஜெயிலர் படத்தின் பிரிவியூ காட்சியை பார்த்துவிட்டு படம் குறித்த தனது கருத்துக்களை படக்குழுவினரிடம் பகிர்ந்து விட்டு தான் ரஜினிகாந்த் இமயமலை செல்லவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அண்ணாத்தை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஒரு கட்டாயம் ரஜினிக்கு உள்ளது என்றே கூறலாம். அதேபோல நெல்சன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான பீஸ் திரைப்படமும் பெரிய அளவில் நல்ல விமர்சனங்களை பெறாத நிலையில் அவருமே ஓர் அழுத்தத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் இமயமலை பயணம் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.





