கடந்த 1987ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் நாயகன். இந்த படம் வெளியாகி 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் கமல் கூட்டணியில் வெளிவர உள்ள படம் தக்லைஃப். இந்த படத்தில் திரிஷா சிம்பு அசோக் செல்வன் அபிராமி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் தக்லைஃப் படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. திருமண விழாவில் கமல் சிம்பு உள்ளிட்டோர் டான்ஸ் ஆடும் காட்சியுடன் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இதையடுத்து தக்லைஃப் படத்தை பெரிய அளவில் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல மணிரத்னம் கமல் திரிஷா சிம்பு உள்ளிட்டோர் தொடர்ந்து பிரமோசன் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வருகின்றனர். அதில் மிக முக்கியமாக வருகிற 16ம் தேதி தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த உள்ளனர்.
சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் வருகிற மே 16ம் தேதி இந்த விழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் தக்லைஃப் படத்தில் இடம்பெற்ற விண்வெளி நாயகனே… என்ற பாடலை மேடையில் அரங்கேற்றம் செய்ய உள்ளனர். இந்த விழாவில் ஹைலைட்டே இதுதான் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து பட்டங்களையும் வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு தெளிவாக கூறிவிட்டார். உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கலைஞானி ஆண்டவர் நம்மவர் என எந்த அடைமொழியும் எனக்கு இனி வேண்டாம். கமல் அல்லது கமல்ஹாசன் என அழைத்தால் போதும் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்த சூழலில் இப்போது உலக நாயகன் என்பதற்கு பதிலாக நடிகர் கமல்ஹாசனுக்கு தக்லைஃப் படம் மூலம் விண்வெளி நாயகன் என்ற பட்டத்தை இந்த இசை வெளியீட்டு விழாவில் பிரபலப்படுத்தி வைப்பாக்கி ஹைலைட் செய்வதே அவர்களது நோக்கம் என்றும் தெரிய வந்துள்ளது. உலக நாயகன் பட்டம் வேண்டாம் என்று கூறியவரை விண்வெளி நாயகனாக மாற்றி காமெடி கீமெடி பண்றாங்களா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





