ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சூட்டிங் தொடங்கியதில் இருந்து இதன் காட்சிகள் கேரள மாநிலத்தைச் சுற்றியே படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இதன் முதல் பாகம் அதிரிபுதிரியான வெற்றியைப் பெற்றிருந்ததால், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இதனையும் தயாரிக்கிறது. அதேபோல் ஜெயிலரின் முதல் பாகத்தில் இடம் பெற்ற பலரும் இதில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மலையாள நடிகர் பகத் பாசில் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுபோக, தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான பாலையாவும் படத்தில் கேமியோ ரோலில் வருவதாக சொல்கிறார்கள். இப்படி சுவாரசியமான பல விஷயங்களை இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து நடிக்கப் போகும் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே அவரது கூலி திரைப்படத்தை தமிழ் திரையுலகம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில், அதற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடவும் பட குழு தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து சிக்குடு கிளிம்ப்ஸ் பாடல் வெளியான நிலையில், முழு பாடலையும் பட குழுவினர் விரைவில் ரிலீஸ் செய்கின்றனர். இதில் டி ராஜேந்தர் பாடியிருக்கிறார். இந்த நிலையில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாமலை திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரஜினிகாந்த் குஷ்பூ சரத்பாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தை சுரேஸ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வசனங்கள் இப்போதும் ஃபேமஸாக இருக்கின்றன. இதை மனதில் வைத்துதான் இந்த திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.





