ஏவிஎம் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் நேற்று காலை காலமானார். அவரது மறைவை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது என்னுடைய கஷ்ட காலங்களில் எல்லாம் என்னுடன் துணை நின்றவர். அவரது மறைவு என்னை மிகவும் பாதிக்கிறது என்று ரஜினிகாந்த் வேதனையாக பேசினார். மேலும் 45 நிமிடங்களுக்கு அங்கு இருந்துவிட்டு பிறகுதான் சென்றார்.
ஆனால் ஒரு சமயத்தில் ரஜினிகாந்தை ஏவிஎம் சரவணன் ஏமாற்றிய சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதை நடிகர் ரஜினிகாந்தே ஒரு விழாவில் பேசும் போது வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுபற்றி ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் பேசியதாவது, என் வீட்டில் ஒரு டிவி இருந்தது. ஆனால் என் மனைவி லதா, பசங்க பார்ப்பதற்காக இன்னொரு டிவி வாங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
டிவிதான் ஏற்கனவே இருக்கே? எதற்கு இன்னொன்று வாங்கணும் என்று மறுத்தேன். ஆனால் லதா இன்னொரு டிவி வாங்கணும் என்று உறுதியாக சொன்னார். அந்த சமயத்தில் ஏவிஎம் சரவணன், ஏவிஎம் தயாரித்த படத்தின் வெற்றி விழாவில் 80 பேருக்கு இலவசமாக டிவி வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்து அந்த 80 டிவிகளை என் கையால் கொடுக்க சொல்லியிருந்தார்.
அதனால் நான் லதாவிடம், இந்த விழாவில் 80 டிவி நான் தரப்போறேன். எனக்கு ஒரு டிவி ஏவிஎம் சரவணன் தர மாட்டாரா? நீ ஆண்டெனா எல்லாம் தயாராக மாட்டி வை என்று சொல்லிவிட்டு விழாவுக்கு வந்து விட்டேன். அந்த விழாவில் 80 பேருக்கு டிவி கொடுத்த பிறகு ஏவிஎம் சரவணன் என்னிடம், சரி சார் ரொம்ப நன்றி, போய்ட்டு வாங்க என்று கூறிவிட்டார் என்று அந்த விழாவில் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் ஏவிஎம் சரவணன் அதன் தொடர்ச்சியாக கூறுகையில், அந்த விழாவில் ரஜினிகாந்த் என்னிடம் 80 பேருக்கு டிவி கொடுத்தேன். எனக்கு டிவி இல்லையா என்று வெளிப்படையாக கேட்டுவிட்டார். உடனே நான் அப்போது இருப்பதிலேயே காஸ்ட்லியான டிவி ஒன்றை வாங்கி அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
அப்போது என்னிடம் போனில் பேசிய லதா ரஜினிகாந்த், அவர் ஏதோ விளையாட்டுக்கு சொல்லி இருப்பார். அதற்காக நீங்கள் புதிய டிவி வாங்கி அனுப்பி விட்டீர்களே என்று சொன்னார். அப்போது அவரிடம் இருந்து போனை வாங்கிப் பேசிய ரஜினி, இல்லை இல்லை நான் உண்மையாக தான் கேட்டேன். ரொம்பவும் நன்றி என்று கூறினார். அந்தளவுக்கு ரஜினி வெளிப்படையான மனிதர் என்று மறைந்த ஏவிஎம் சரவணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்,





