இசைஞானி இளையராஜா வேலியண்ட் என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்போனி இசை நிகழ்ச்சியை இன்று லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்திருக்கிறார். முன்னதாக சென்னையில் இருந்த போது அவரை தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இரு தினங்களுக்கு முன் லண்டன் கிளம்பிச் சென்ற இசைஞானி இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இளையராஜா, இது என்னுடைய பெருமை அல்ல; இந்திய நாட்டின் பெருமை. உங்கள் அனைவரது சார்பாகதான் நான் அங்கே இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தப் போகிறேன் என்றும் பெருமிதமாக கூறிவிட்டுச் சென்றார்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள் என்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி உங்களால் இந்தியாவிற்கே பெருமை, பாராட்டுக்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜாவை கடந்த பல ஆண்டுகளாகவே சாமி என்று அழைப்பதை ரஜினி வழக்கமாக கொண்டிருக்கிறார். அதேபோல் ரஜினியையும் இளையராஜா சாமி என்றுதான் நேரில் சந்திக்கும் போது அழைப்பது வழக்கம். ஆன்மிகத்தில் இருவருமே அதிக நாட்டம் உள்ளவர்களாக இருப்பதால், இப்படி அழைத்துக்கொள்கின்றனர். அதனால் தான் இந்த எக்ஸ் பதிவில் இளையராஜாவை சாமி என்று வாழ்த்தி தனது பாராட்டுகளை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறார்.
அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இதுவரை இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துகள் சொல்லவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராகவும் அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ள விஜய், இளையராஜாவை புறக்கணித்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
சிம்பொனி என்னும் சாதனை இசை நிகழ்ச்சியை லண்டனில் நடத்திய இளையராஜாவுக்கு நேரில் இல்லாவிட்டாலும், தனது எக்ஸ் வலைதள பக்கம் மூலமாகவது நடிகர் விஜய் வாழ்த்துகளை முன்னரே தெரிவித்து இருக்க வேண்டும். வேண்டுமென்றே இளையராஜாவுக்கு வாழ்த்து சொல்வதை நடிகர் விஜய் தவிர்த்தாரா என்று பலர் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.





