லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்கு என தனி ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். படத்திற்கு படம் திரைக்கதையில் அவர் கூட்டும் சுவாரசியம்தான் இதற்கு காரணம். ஒரு அதிரடி கதையை, எந்த அளவுக்கு ரசிகர்களுடன் இணைக்க முடியும் என்ற சூட்சுமம் அறிந்தவர் தான் லோகேஷ் கனகராஜ்.
அதனால்தான் அவர் கை வைத்த ஐந்து திரைப்படங்களுமே, வசூல் ரீதியாக பணத்தை வாரி குவித்து இருக்கின்றன. தனது படத்தின் கதாநாயகர்களுக்கு என தனி மேனரிசத்தை லோகேஷ் கனகராஜ் தனது முதல் படங்களில் இருந்தே காட்டி வருகிறார்.
இதில் மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களில் விஜய் மற்றும் கமல்ஹாசனை அவர் காட்டிய விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தில் விஜயின் ஜே.டி. கதாபாத்திரம் தான் இங்கு பலருக்கும் ஃபேவரைட். ஏனென்றால் அதற்கு முன்பு அப்படி ஒரு விஜயை இங்கு பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
அப்படி பார்த்திருந்தாலும் அது ஒரு 15 வருடங்களுக்கு பிறகாக தான் இருந்திருக்கும். படத்தின் முதல் பாதி முழுவதும், ஒரு விதமான குழப்பமான மனநிலையிலேயே விஜயை காட்டியிருப்பார் லோகேஷ் கனகராஜ். இப்படி தனது கதாநாயகர்களுக்கு எழுத்தின் மூலம் உயிர் கொடுக்கும் அவர், படத்தின் அறிவிப்பு காண வீடியோவிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
முக்கியமாக விக்ரம் மற்றும் லியோ திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோ இங்கு பலருக்கும் இஷ்டமான வீடியோ. விக்ரம் படத்தின் அறிமுக வீடியோவில், வில்லன்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்படுவதும், துப்பாக்கி மற்றும் அரிவாளை மறைத்து வைத்துவிட்டு ஆரம்பிக்கலாங்களா என்று கமல் கூறுவதும் இங்கு பலருக்கு பிடித்து இருக்கும். தற்போது எந்த வரிசையில் தான் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் இணையும் திரைப்படத்தின் வீடியோ அமைந்திருக்கிறது.
இந்த படத்திற்கு கூலி என டைட்டில் வைத்திருக்கிறார்கள். அதிலும் ரஜினிகாந்த், தனது பழைய படத்தின் வசனத்தை ஜோராக பேசி மாஸ் கிளப்புகிறார். இதனை பார்க்கும்போது நிச்சயமாக ரஜினிகாந்திற்கு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் தான் என்று கூறப்படுகிறது. இதேபோல், வீடியோவின் இறுதியில் அவர் முடிச்சிடலாமா என்று கூறும் வசனமும் இங்கு பலரைக் கவர்ந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் என்னதான் சொல்ல வருகிறார் என ரசிகர்கள் குழம்பி போய் இருக்க, அதற்கு அடுத்த ஆண்டு தான் விடை தெரியும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





