நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உச்சத்தில் இருப்பவர். எம்ஜிஆருக்கு பிறகு சினிமா நடிகர்களில் அதிக பெயர், புகழை சம்பாதித்த ஒருவர் ரஜினிகாந்த் மட்டுமே. எம்ஜிஆருக்கு எப்படி மக்கள் மத்தியில் அன்பும், ஆதரவும் கிடைத்ததோ அதே அன்பும், ஆதரவும் ரஜினிக்கு இருக்கிறது. இப்போது பிறந்த குழந்தைகள் கூட ரஜினியை, அவரது ஸ்டைலை ரசிக்கின்றன.
அப்படிப்பட்ட ரஜினிகாந்த் எப்போதும் ரசிகர்களை இழிவாக நடத்தியதில்லை. பேசியதில்லை. எந்த இடத்திலும் ரசிகர்களை அழைத்து தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிப்பார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி என ஷூட்டிங் வந்தால் ரசிகர்களை அழைத்து தன்னுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ரஜினி பிறந்த நாளின் போது சென்னையில் ரஜினி இருப்பதில்லை. இமயமலைக்கு சென்றுவிடுவார். அல்லது ஆந்திரா, கர்நாடகா, மும்பை என அவரது நடிக்கும் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார். பெரும்பாலும் அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் அவர் இருப்பதில்லை. இதுகுறித்து முன்பே ரசிகர்களுக்கு அறிக்கை மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இன்று ரஜினி தனது 73வது பிறந்த நாள் என்ற நிலையில், குடும்பத்துடன் அவர் கேக் வெட்டும் புகைப்படம் வெளியானது. மற்றபடி அவர் வீட்டின் முன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை அவர் சந்திக்க வரவில்லை. மணிக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ரஜினி வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்தான், அவர் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சந்திக்காததற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது 1980களில் இது நடந்துள்ளது. அதற்கு பிறகுதான் ரஜினி, ரசிகர்களை தனது பிறந்த நாளில் சந்திப்பதை தவிர்க்கிறார் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார்.
ஒருமுறை ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா சென்னையில் நடந்துள்ளது. அதில் பல்வேறு ஊர்களில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர். விழா முடிந்து ஊருக்கு அவர்கள் திரும்பி செல்லும்போது வழியில் நடந்த விபத்தில் 3 ரசிகர்கள் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து அந்த ரசிகர்களின் வீடுகளுக்கு ரஜினி துக்கம் விசாரிக்க சென்ற போது, அங்கு அழுதுகொண்டிருந்த அந்த தாய்மார்கள், ரஜினியிடம் கோபமாக பேசியுள்ளனர். அதனால் மனமுடைந்து போன ரஜினி, தனது பிறந்த நாளுக்காக தன்னை தேடி ரசிகர்கள் சென்னைக்கு வரக்கூடாது என்பதற்காகவே, அந்த நாளில் ஊரில் இருப்பதில்லை என்று, அவரே ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்தார் என்று. செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.





