நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறது. ரஜினியின் 170வது படமான இந்த படத்தை தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வேட்டையன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். நடிகர் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்ட ரஜினிகாந்த், கடந்த வௌ்ளிக்கிழமையன்று சென்னை திரும்பினார். தீவுத்திடலுக்கு சென்று அஞ்சலி செலுத்திய அவர், இப்போது சென்னையில் இருக்கிறார்.
வழக்கமாக பொங்கல், புத்தாண்டு, தீபாவளி பண்டிகை காலங்களில் ரஜினிகாந்த், ரசிகர்களை சந்திப்பது வழக்கம். அதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் அதிகாலை முதலே ரசிகர்கள் காத்திருக்க துவங்கி விடுவர். ரஜினி வந்தால் அவருக்கு வாழ்த்துகளை தெரிவிப்பர்.
ஆங்கில புத்தாண்டு தினமான இன்றும் காலை முதலே ரசிகர்கள் போயஸ் கார்டனில் ரசிகர்கள் காத்திருக்க துவங்கிவிட்டனர். ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுவிட்டதாக அங்கிருந்த சிலர் புரளியை கிளப்பி விட்ட நிலையில், காத்திருக்கலாமா திரும்பி போகலமா என்ற குழப்பத்தில் தவித்தனர்.
ஆனால் ரஜினிகாந்தை புத்தாண்டு தினத்தில் பார்த்தே ஆக வேண்டும் என்ற ரசிகர்கள் ஆசைப்பட்ட நிலையில், போயஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருகே, காம்பவுண்ட் சுவர் அருகே நின்று ரசிகர்களுக்கு காட்சியளித்தார்.
கைகளை வேகமாக ஆட்டி, அவரது வழக்கமான ஸ்டைலில் கும்பிட்டு ரசிகர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். ஒரு கட்டத்தில் பறக்கும் முத்தம் ஒன்றை தந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின் வீட்டுக்குள் சென்றுவிட்டார். ஏறக்குறைய ஒரு நிமிடம் மட்டுமே ரஜினி அங்கு நின்று சென்ற நிலையில், ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் உற்சாகமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.





