நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்துவரும் மன்சூர் அலிகான் இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் லியோ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார்.
இந்த படத்தில் திரிஷாவுடன் சேர்ந்து நடிக்காதது குறித்து அவர் கூறிய ஒரு கருத்து சர்ச்சையானது. இதற்கு திரிஷா காட்டமாக பதில் அளித்திருந்தார். இதற்கு நடிகை குஷ்பு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் திரிஷாவுக்கு ஆதரவாக மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். அதில் நடிகர் மன்சூர் அலிகானை கடுமையாக கண்டித்து இருந்தனர்.
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு பகுதி மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே திரிஷாவிடம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதால், இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. போலீசார் தரப்பில் கேட்டதற்கு மன்சூர் அலிகான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என திரிஷா கூறிவிட்டார்.
ஆனாலும் இந்த பிரச்னையில் அடுத்தக்கட்டமாக திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர மன்சூர் அலிகான் முடிவு செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதல்கட்டமாக வழக்கை விசாரித்த நீதிபதி, இதில் பாதிக்கப்பட்ட திரிஷா தானே உங்கள் மீது வழக்குப்போட வேண்டும் என மன்சூர் அலிகானிடம் கேட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மன்சூர் அலிகான் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அவர்கள் பதில் பதிவு செய்து அவர்கள் எதிர்ப்பு, கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதை அவதூறாக எடுத்துக்கொள்ள முடியாது.
இந்த விஷயத்தில் விளம்பர நோக்கத்திலும், கோர்ட் நேரத்தை வீணாக்குகிற விதமாகவும் வழக்கு தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்கிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அந்த தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளார்.





