ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் ராணா, நடிகைகள் ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. என்கவுண்டரை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுப்பதாகவும், படத்தில் ரஜினிகாந்த் பார்வையற்றவராக நடிப்பதாகவும் பேசப்படுகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்திற்கு நடுவே நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தையும் நடித்து முடித்துள்ளார். ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் இந்த திரைப்படம், வரும் ஒன்பதாம் தேதி வெளியாகிறது. இதில், விஷ்ணு விஷால் விக்ராந்த், கே எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் என்னும் சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். தான் எடுத்த திரைப்படங்களிலேயே இது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பின்னர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட இது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதற்கான திரைக்கதை எழுதும் வேலையில் நெல்சன் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்று உள்ளார்.
இதில் நடிகர்கள் தனுஷ், தெலுங்கு திரையுலகில் ராம்சரண் சிரஞ்சீவி, இந்தி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பும்போது பேசிய ரஜினிகாந்த், வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோயில் திறப்பு விழாவில் தான் கலந்து கொண்டது பாக்கியம் என்று கூறியிருக்கிறார். ராமரின் சிலை மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறி இருக்கும் ரஜினிகாந்த், இனி ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரப்போவதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





