எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், அவருக்கு மிகப்பெரிய வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. 2.ஓ திரைப்படம் என 800 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது என்று பலர் கூறினாலும், அது என்னமோ ரசிகர்களுக்கு மனதளவில் ஒட்டாத திரைப்படமாகவே இருந்து வந்தது.
இது ஒரு பக்கம் இருக்க, லிங்கா, கோச்சடையான், தர்பார், அண்ணாத்த என வரிசையாக தோல்வி படங்களை மட்டுமே ரஜினிகாந்த் கொடுத்து வந்தார். என்னதான் காலா மற்றும் பேட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும், வசூலில் என்னமோ பெரிதளவு சாதிக்கவில்லை. இதனால் குழப்பத்தில் இருந்த சூப்பர் ஸ்டார், இமாலய வெற்றியை கொடுக்க முடியாமல் பரிதவித்து வந்தார்.
இப்படியான சூழலில், கோலமாவு கோகிலா, டாக்டர் வெற்றிகளை கொடுத்த நெல்சன் உடன் இணைந்த ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை கொடுத்தார். கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் வசூல் சாதனை புரிந்து, ரஜினிக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது.
அதுமட்டுமல்ல பீஸ்ட் பட தோல்வியால் இணையத்தில் கிண்டலுக்கு ஆளான நெல்சனுக்கும், ஜெயிலர் திரைப்படம் உற்சாகத்தை கொடுத்தது. ரஜினி மட்டுமல்லாமல் கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மலையாள பிரபலம் மோகன்லால் ஆகியோருக்கு சரியான மாஸ் காட்சிகளை வைத்ததால், தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா கர்நாடகா கேரள மாநிலங்களிலும் ஜெயிலர் வசூல் சாதனை புரிந்தது.
கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் அளவுக்கு ஜெயிலர் படம் வசூலித்து இருப்பதால், மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம், ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரினை பரிசாக வழங்கியது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது, உண்மையை கூற வேண்டும் என்றால், ரீ ரெகார்டிங்க்கு முன்பு படத்தைப் பார்த்தபோது சுமாராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் அனிருத் படத்தை தூக்கி உயர்த்தி விட்டார். எனக்கும் அவரது நண்பர் நெல்சனுக்கும் அவர் ஹிட் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். கலாநிதி சார் பரிசாக கொடுத்த காரில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அந்தக் காரில் பயணம் செய்த போது தான் நான் ஒரு பணக்காரராக உணர்ந்தேன். படம் வெளியாகி ஐந்து நாட்களாக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இப்போது ஜெயிலரை விட பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்று டென்ஷனாக உள்ளது. பாட்ஷா திரைப்படத்திற்கு பிறகு முற்றிலும் வித்தியாசமான முறையில் முத்து திரைப்படத்தில் நடித்தேன். இப்போது அதேபோலத்தான் லால் சலாமிலும் நடித்துள்ளேன். ஜெயிலர் படத்தை திரையரங்குகளிலும், ஓடிடியிலும் ரசிகர்கள் ரசித்துள்ளனர். இது ஒரு கொண்டாட்டம் என்று பேசினார்.





